2016-08-11 15:38:00

கிறிஸ்தவ தலித் மக்கள் கேட்பதெல்லாம், நீதியும் சமத்துவமுமே


ஆக.11,2016. இந்தியாவில் வாழும் கிறிஸ்தவ தலித் மக்கள், சிறப்பு  சலுகைகளைக் கேட்கவில்லை, அவர்கள் கேட்பதெல்லாம், நீதியும் சமத்துவமுமே என்று மும்பை பேராயர், கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ் அவர்கள் கூறினார்.

இந்தியாவில் ஏனைய தலித் மக்கள்மீது காட்டப்படும் அனைத்து பாகுபாடுகளையும் துன்பங்களையும் கிறிஸ்தவ தலித் மக்களும் அனுபவிக்கின்றனர் என்று கூறிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், கிறிஸ்தவ தலித் மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் கிடைப்பதில்லை என்பது, அவர்கள் அனுபவிக்கும் கூடுதல் துன்பம் என்று சுட்டிக்காட்டினார்.

இந்து மதத்தைப் பின்பற்றுவோர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சாதி என்ற பிரிவில் இணைக்கப்படுவர், ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்ற ஒரு சட்டத்தை உருவாக்கி, 1950ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி, அதில் இந்தியக் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டார்.

341ம் எண் கொண்ட இச்சட்டத்தில் 1956 மற்றும் 1990 ஆகிய இரு ஆண்டுகள், மாற்றங்களைப் புகுத்தி, புத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோரையும் தாழ்த்தப்பட்ட சாதி என்ற பிரிவில் இந்திய அரசு இணைத்தது; ஆனால், கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியரையும் இணைக்க மறுத்தது.

எனவே, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த தலித் மக்களுக்கு, ஆகஸ்ட் 10ம் தேதி, இருள் நிறைந்த ஒரு நாள் என்று கூறி, ஆகஸ்ட் 10ம் தேதியை 'கருப்பு நாள்' என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, கடந்த சில ஆண்டுகள், கடைபிடித்து வருகின்றது.

ஆகஸ்ட் 10, இப்புதனன்று இந்தியாவின் பல்வேறு மறைமாவட்டங்களில் கருப்பு நாள் கடைபிடிக்கப்பட்டது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.