2016-08-10 16:09:00

மற்றவர்களை மதிப்பதன் வழியே ஒற்றுமை–திருத்தந்தையின் டுவிட்டர்


ஆக.10,2016. "பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயம், மற்றவர்களை மதிப்பதன் வழியே ஒற்றுமையை நாடவேண்டும்" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக, திருத்தந்தை  பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்டார்.

ஆகஸ்ட் 9, இச்செவ்வாயன்று, ஐ.நா.வின் பழங்குடியினர் உலக நாள் சிறப்பிக்கப்பட்டபோது, பழங்குடியினரை மையப்படுத்தி “பழங்குடியின மக்கள், மதிப்புடன் நடத்தப்படுவதற்கு விண்ணப்பிப்போம், ஏனெனில், அவர்களின் சுய அடையாளமும், உயிர்வாழ்வுமே அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார் என்பதும், இதே எண்ணத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை மாத செபக் கருத்தாக வெளியிட்டிருந்தார் என்பதும், குறிப்பிடத்தக்கன.

ஒவ்வொரு நாளும், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, அரேபியம், இலத்தீன் ஆகிய மொழிகள் உட்பட, ஒன்பது மொழிகளில் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகி வருகின்றன.

@pontifex என்ற முகவரியில் செயல்படும் திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், ஆகஸ்ட் 9ம் தேதி முடிய, 913 செய்திகள் பதிவாகியுள்ளன என்பதும், 9,683,288 பேர் அவரது கருத்துக்களை பின்பற்றுவோரின் எண்ணிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.