2016-08-10 17:00:00

பிலிப்பீன்ஸ் நாட்டில் கொலைகளை நிறுத்த ஆயர்கள் விண்ணப்பம்


ஆக.10,2016. சட்டம், நீதிமன்றம் இவற்றின் கண்காணிப்பு ஏதுமின்றி, அண்மைய நாள்களில் பிலிப்பீன்ஸ் நாட்டில் நிகழுந்துவரும் கொலைகளை நிறுத்தும்படி, அந்நாட்டு ஆயர் பேரவை விண்ணப்பித்துள்ளது.

பிலிப்பீன்ஸ் நாட்டின் புதிய அரசுத் தலைவர், ரொட்ரிகோ துத்தெர்த்தே (Rodrigo Duterte) அவர்கள் பதவியேற்றத்திலிருந்து, போதைப் பொருள் வர்த்தகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள கடினமான செயல்பாடுகளால் 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பீதேஸ் (Fides) செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

கடுமையான இந்த முயற்சிகளை நிறுத்தவேண்டும் என்ற கருத்துடன், 'கொலை செய்யாதிருப்பாயாக' என்ற தலைப்பில், பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை கொள்கை பரப்பு முயற்சியொன்றைத் துவங்கியுள்ளது.

குற்றவாளிகளும் மனிதர்களே, என்றும், மனித உயிர்கள் எந்தச் சூழலிலும் மதிக்கப்படவேண்டும் என்றும், பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை தலைவர், பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் அவர்கள் ஒரு சுற்றுமடலை அண்மையில் வெளியிட்டது, குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் வர்த்தக உலகின் பெரும் குற்றவாளிகளைக் கொல்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாத தவறு என்று தலத்திருஅவை கூறி வருகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.