2016-08-10 16:53:00

பிரேசில் பழங்குடியின மக்கள் மீது கவனம் திரும்பவேண்டும்


ஆக.10,2016. பிரேசில் நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களை நோக்கி, உலகின் கண்கள் திரும்பியிருக்கும் வேளையில், அந்நாட்டின் பழங்குடியின மக்கள் மீதும் நம் கவனம் திரும்பவேண்டும் என்று கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஒன்று விண்ணப்பித்துள்ளது.

உலகத்தின் சுவாசப்பை என்றழைக்கப்படும் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினர், பல்வேறு வழிகளில் தங்கள் உரிமைகளையும், வாழ்வாதரங்களையும் இழந்துள்ளனர் என்று, வெளிநாடுகளின் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் ஓர் இங்கிலாந்து கத்தோலிக்க அமைப்பான - Catholic Agency For Overseas Development (CAFOD) - கூறியுள்ளது.

ஆகஸ்ட் 9, இச்செவ்வாயன்று, ஐ.நா.வின் உலகப் பழங்குடியினர் நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, CAFOD அமைப்பினர் விடுத்த விண்ணப்பத்தில், ஒலிம்பிக் விளையாட்டுக்கள் வழியே, உலகின் கவனத்தை ஈர்த்துள்ள பிரேசில் நாடு, தனது கருவூலமான அமேசான் காடுகளைப் பற்றி உலகத்திற்குப் பறைசாற்ற, இதுவே தகுந்த தருணம் என்பதை மறந்துவிடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினர், முன்னேற்றம் என்ற போர்வையில், தங்கள் கலாச்சாரம், வாழ்வுரிமை, நிலம், இயற்கை வளங்கள் அனைத்திலிருந்தும் அந்நியப்படுத்தப்படுவதை பிரேசில் அரசு தவிர்க்க வேண்டும் என்று CAFOD அமைப்பினர் கூறியுள்ளனர்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.