2016-08-10 16:58:00

ஜப்பான், இராணுவமற்ற நாடாக நீடிக்கவேண்டும் - ஆயர்கள்


ஆக.10,2016. ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய நாள்களில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசப்பட்டதன் 71ம் ஆண்டு நினைவு கடைபிடிக்கப்பட்ட வேளையில், ஜப்பான் நாடு இராணுவமற்ற ஒரு நாடாக நீடிக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தை, அந்நாட்டு ஆயர்கள் அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போரினால் தங்கள் நாட்டில் ஏற்பட்ட  அழிவுகளைத் தொடர்ந்து, ஜப்பான் அரசு, அமைதியை விரும்பும் அரசாக, அடுத்த நாட்டின் மீது படையெடுக்காத அரசாக தன்னை அறிவித்தது.

அண்மைய காலங்களில் உலகில் பெருகிவரும் வன்முறைகள், பாதுகாப்பற்ற நிலை இவற்றைக் காரணம் காட்டி, தங்கள் நாட்டின் இராணுவக் கொள்கைகளில் மாற்றம் தேவை என்ற கருத்தை, ஜப்பான் பாராளுமன்றம் விவாதித்து வருவதைக் குறித்து, ஜப்பான் ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் என்று, CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆகஸ்ட் 6ம் தேதி முதல், 15ம் தேதி முடிய 'அமைதியின் பத்து நாள்கள்' என்ற முயற்சியை, ஜப்பான் தலத்திருஅவை, கடந்த 35 ஆண்டுகள் கடைப்பிடித்து வரும் வேளையில், ஜப்பான் ஆயர்கள் இராணுவத்திற்கு எதிரான தங்கள் கருத்தை ஒரு விண்ணப்பமாக அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.

தற்காப்பு என்ற எண்ணத்துடன் இராணுவம் செயல்படுவதற்கும், கருத்து வேறுபாடுகள் காரணமாக அடுத்த நாட்டில் படையெடுக்கும் வகையில் இராணுவம் செயல்படுவதற்கும் உள்ள வேறுபாடுகளை எடுத்துரைக்கும் ஜப்பான் ஆயர்கள், வன்முறையை, வன்முறையால் எப்போதும் வெல்லமுடியாது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.