2016-08-10 16:16:00

கிறிஸ்தவ மறையை அழித்துவிட முடியாது - கர்தினால் பஞ்ஞாஸ்கோ


ஆக.10,2016. கிறிஸ்தவ மறையை, சிறுபான்மை மதமாகக் குறைக்கும் முயற்சிகளில் பலர் ஈடுபடலாம், ஆனால், அதை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்று இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள் கூறினார்.

ஆகஸ்ட் 10, இப்புதனன்று, திருத்தொண்டரான புனித இலாரன்ஸ் விழா கொண்டாடப்பட்ட வேளையில், ஜெனோவா பேராலயத்தின் பாதுகாவலரான இப்புனிதரின் திருவிழாத் திருப்பலியை நிறைவேற்றிய, ஜெனோவா பேராயர், கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

கிறிஸ்தவ மறையை அழித்துவிட்டு, புறவினத்தாரின் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில், உரோமையப் பேரரசன் வலேரியன், 258ம் ஆண்டு, ஆகஸ்ட் 10ம் தேதி, திருத்தொண்டர் இலாரன்ஸைக் கொலை செய்தார் என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், இன்றைய காலத்தில், கிறிஸ்தவ மறையை பல்வேறு வழிகளில் ஒதுக்கி வைக்கும் முயற்சிகள் நிகழ்கின்றன என்று கூறினார்.

கடவுளுக்குப் பதிலாக வேறு கொள்கைகளையும், செல்வங்களையும் பீடமேற்றும் இவ்வுலகப் போக்கு நம்மை தடுமாறச் செய்கின்றன என்பதையும் கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், தன் மறையுரையில், வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார்.

பன்முகச் சமுதாயம், சமத்துவம் என்ற பல்வேறு காரணங்கள் கூறி, கிறிஸ்தவத்தையும், மதங்களையும் ஓரங்களில் ஒதுக்கிவிட்டு, கடவுள் அற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கும் முயற்சிகள் தோல்வியைக் காணும் என்றும், கிறிஸ்தவ மறையை மனித முயற்சிகள் அழிக்க முடியாது என்றும் கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.