2016-08-10 15:24:00

இரக்கம், இதயத்திலிருந்து கரங்களுக்குச் செல்லட்டும்


ஆக.10,2016. ஆகஸ்ட் மாதக் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாது, திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரையைக் கேட்பதற்கு, இப்புதனன்று பெருமளவில் திருப்பயணிகளின் கூட்டம், திருத்தந்தை அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தை நிறைத்திருந்தது. இத்திருப்பயணிகளுக்கு, அரேபியம் உட்பட, பல்வேறு ஐரோப்பிய மொழிகளில், லூக்கா நற்செய்தி, பிரிவு 7, திருச்சொற்றொடர்கள் 11 முதல் 17 வரை முதலில் வாசிக்கப்பட்டது. இப்பகுதி, இறந்துபோன நயீன் ஊர்க் கைம்பெண்ணின் ஒரே மகனை இயேசு உயிர்பெறச் செய்தது பற்றியது. இப்புதன் மறைக்கல்வி உரையை, முதலில் இத்தாலியத்தில் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புச் சகோதர, சகோதரிகளே, லூக்கா நற்செய்தியிலிருந்து நாம் வாசிக்கக் கேட்ட இப்பகுதி, உண்மையிலேயே, இயேசு, ஓர் இளைஞனை உயிர்பெறச் செய்த மாபெரும் ஒரு புதுமையை நமக்கு வழங்குகிறது. எனினும், இந்நிகழ்வின் மையம், புதுமை அல்ல, ஆனால், அந்த இளைஞனின் தாய்மீது இயேசு காட்டிய பரிவன்பாகும் என்று கூறி மேலும் தொடர்ந்து உரையாற்றினார்.

இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டின் இப்புதன் மறைக்கல்வியுரையில், நயீன் ஊர்க் கைம்பெண்ணின் மகனை இயேசு உயிர்பெறச் செய்த புதுமை பற்றி நோக்குகிறோம். அன்று, சீடர்கள் மற்றும் பெருந்திரளான மக்களுடன், இயேசு, நயீன் ஊர் வாயிலை அடைந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கிச் சென்றதைக் கண்டார். இறந்த இவர், தாய்க்கு ஒரே மகன். தனது ஒரே மகனை அடக்கம் செய்வதற்கு, கல்லறைக்குச் சென்று கொண்டிருந்த, இத்தாயின் வேதனை கண்டு மனதுருகிய இயேசு, மரணத்தின் எதார்த்தத்தை நேரடியாக எதிர்கொண்டு, அந்த இளம் மகனுக்கு வாழ்வளிக்கிறார். அந்த ஊர் வாயிலில் நடந்த இச்சந்திப்பு, நம் யூபிலித் திருப்பயணத்தில் புனிதக் கதவு வழியாக நாம் கடந்து செல்கின்றபோது, ஆண்டவரின் வாழ்வளிக்கும் இரக்கத்தோடு நாம் மேற்கொள்ளும் சந்திப்பைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். நம் கடந்த காலத்தின் இன்ப துன்பங்களோடு, அந்தப் புனிதக் கதவை நாம் நெருங்கும்போது, இயேசு, நமக்கு, புதிய தொடக்கத்தை வழங்குவார், அவரின் வாக்குறுதிகளில் நம் நம்பிக்கையை மீண்டும் உயிர்பெறச் செய்வார் என்ற நம்பிக்கையில் செல்ல வேண்டும். நயீன் ஊர்க் கைம்பெண்ணின் மகனுக்கு இயேசு புதிய வாழ்வை வழங்கிய நிகழ்வு, நாமும், திருமுழுக்கு அருளடையாள அருளின் வழியாக, மரணத்தினின்று எழுப்பப்பட்டு, கிறிஸ்துவில் புதிய வாழ்வு பெறுவோம் என்பதை நினைவுபடுத்துகின்றது. திருஅவை நமக்குத் தாயாக மாறுகின்றது. உலகின்முன், இறைவனின் இரக்கமுள்ள அன்பிற்கு, சான்றுகளாக வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இந்த யூபிலி ஆண்டில், இயேசுவை நாம் மேலும் அதிகமதிகமாக நெருங்கிச் செல்வோம். ஏனெனில், அவரே மீட்புக்கும், புதிய வாழ்வுக்கும், அழைத்துச் செல்லும் புனிதக் கதவு. நாம் பெற்றுள்ள இறைஇரக்கம், நம் இதயங்களிலிருந்து கரங்களுக்குச் செல்வதாக. உடல் மற்றும் ஆன்மீக அளவில் நாம் ஆற்றும் இரக்கத்தின் பணிகளில் இந்த இறைஇரக்கம் வெளிப்படுத்தப்படுவதாக 

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வி உரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டு, அனைவருக்கும், அருள் மற்றும் ஆன்மீகப் புதுப்பித்தலின் காலமாக அமைவதாக என்றார். பின்னர், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிழ்வும், அமைதியும் எல்லார்மீதும் பொழியப்படச் செபித்து, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.