2016-08-10 15:59:00

இரக்கத்தின் தூதர்கள் – அருளாளர் அன்னை தெரேசா பாகம் 10


ஆக.10,2016.  கொல்கத்தா துறைமுகம். காலை மணி ஆறு. பணியாள்கள் அங்குமிங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். பரபரப்பான அந்த நேரத்தில் பளுதூக்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு அது பேரிரைச்சலுடன் கீழே விழுந்துவிட்டது. அதன் அடியில் இராமு என்ற பணியாள் அகப்பட்டுக்கொண்டார். சில நொடிகளில் அவர் உடல் சின்னாபின்னமாகிவிட்டது. உடலில் உயிர் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. துறைமுக மேலாளர், சதைகள் தொங்கிக்கொண்டிருந்த இராமுவை உடனடியாக அரசினர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வகை செய்தார். மருத்துவர்கள் கைவிட்டனர். மரணம் உறுதியாகிவிட்டது. காயங்கள் முடைநாற்றம் எடுக்கத் தொடங்கின. அருவருப்பான இராமுவின் உடலைத் தீண்ட அவருடைய சொந்தங்கள் கூடத் தயங்கின. இந்த நிலையில், தன்னிடம் யார் வந்தாலும் வசைச் சொற்களே இராமுவிடமிருந்து வெளிவந்தன. பாவம், எல்லாவற்றையும் இழந்துவிட்ட இராமு, நன்றாக மற்றவர்களிடம் நடந்துகொள்வார் என்று எப்படி எதிர்பார்ப்பது! இதற்கிடையில், அன்னை தெரேசா சபையினர் வாரந்தோறும் மருத்துவமனைகளுக்குச் சென்று நோயாளர்களிடம் உரையாடிவிட்டு வருவது வழக்கம். அந்த அரசினர் மருத்துவமனைக்குச் சென்ற அச்சகோதரிகள், அன்று, இராமுவிடமும் சென்றனர். யாருமே தனது அருகில் வரக்கூடிய தகுதி இல்லாத நிலையில் இருந்த இராமுவுக்கு, இச்சகோதரிகளின் வரவு வேடிக்கையாக இருந்தது.

இராமு இச்சகோதரிகளிடம், என் உடலிலிருந்து வரும் துர்நாற்றம் உங்களுக்கு அருவருப்பாக இல்லையா? என்று கேட்டார். அதற்கு அச்சகோதரிகளில் ஒருவர், அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. உங்களிடம் பேசி, ஏதாவது உங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியுமா? உங்களைத் தேற்ற முடியுமா? என்பதுதான் எங்களுக்கு முக்கியம் என்றார். இராமுவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அப்படியானால் நான் உங்களுடனே வந்துவிடுகிறேன் என்று சிறுகுழந்தைபோலக் கதறினார் இராமு. மருத்துவரின் உதவியுடன் இராமு, காளிகாட் நிர்மல் ஹிர்தய் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். அந்த இதயத்தின் வேதனை, அதில் ஏற்பட்ட துடிதுடிப்பு, அந்த இல்லத்தில் மற்றவரிலும் எதிரொலித்தன. பின்னர் இராமு, மிக மிக அமைதியாக அந்த இல்லத்தில் உயிர்விட்டதாக, நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.

நிர்மல் ஹிர்தய் இல்லத்தில் படுக்கையில் கிடந்த பலரில் ஒருவர் கோபால். மெலிந்த உடலோடு இவர் இருந்தார். பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேறியவர். பந்த பாசங்களில் அடிபட்டு மீண்டவர். மரணத்தின் இறுதிப்படி வரை சென்று பின்னர், அன்னை தெரேசா சபையினரால் மீட்கப்பட்டவர். நிர்மலமான முகத்தோற்றத்தைக்கொண்ட இவரின் அதரங்களில் செயற்கைத்தனம் என்பது சிறிதும் இல்லை. முகத்தில் அப்படியொரு புன்னகை. அவரைப் பாரக்கச் சென்ற ஒருவரிடம் தனது சோகக் கதையை ஆங்கிலத்தில் விவரித்திருக்கிறார் கோபால்.

"நான் ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவன். ஹைதராபாத் மாநிலம் இந்திய யூனியனோடு இணைக்கப்பட்டதை எதிர்த்து, 1952ம் ஆண்டில் இடம்பெற்ற முல்கி (Mulkhi) சட்ட எதிர்ப்புக் கலவரத்தின்போது, தெருவெல்லாம் சகிக்க முடியாத அட்டூழியங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாக மாறியிருந்தன. காவல்துறையின் கொடுமையும் உச்சத்திற்கு வந்தது. எங்கள் தெருவில் நடந்த கலவரத்தில் ஒன்றுமறியாத என்னையும் குற்றவாளியாக்கினார்கள். நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டேன். சிறைத்தண்டனை உறுதியாகிவிடும் நிலையில், இந்த அநீதியைச் சகிக்க முடியாமல் தலைமறைவாகி விட்டேன். சென்னைக்கு ஓடினேன். பின் பெங்களூருவுக்கு ஓடினேன். உணவகம் ஒன்றில் வேலை செய்தேன். வட இந்திய உணவகம் அது. கிடைத்த ஊதியம் போதவில்லை. காவல்துறையின் பயம் வேறு. கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் டெல்லிக்குச் சென்றேன். அங்கிருந்து அசாமிற்கு ஓடினேன். செய்யாத ஒரு தவறுக்காக, என் வாழ்க்கையே இப்படி ஓட்டப்பந்தயமாகிவிட்டது பற்றி நான் விரக்தி அடைந்ததுமுண்டு. அங்கிருந்த நல்லவர்கள், அன்னை தெரேசா சபையினர் உதவி செய்வார்கள் என்று நம்பிக்கையூட்டினர். அடுத்த புகலிடம் கவுஹாத்தி. அதன்பின் அலகாபாத். அங்கிருந்த ஓர் அருள்பணியாளர், குளிருக்கு ஒரு கோட்டும், ஐம்பது ரூபாயும் கொடுத்தார். நன்றியுடன் அதைப் பெற்றுக்கொண்டு, 1970ம் ஆண்டில் லாகூருக்கு ஓட்டம் பிடித்தேன். இந்திய எல்லைப் பகுதியிலிருந்த நம் காவலர்கள், சண்டையும் சச்சரவுமாக இருக்கும்போது நீ அங்குச் செல்வது சிறந்தது அல்ல, நீ எங்களுடனே ஜீப்பில் வந்துவிடு என்று சொல்லி, என்னை ஜீப்பில் ஏற்றி, அமிர்தசரசில் கொண்டுபோய் விட்டார்கள்.

அமிர்தசரஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் எனக்கு உதவி செய்தார்கள். இருபது நாள்கள் தங்க வசதியும் செய்துகொடுத்தார்கள். வேலை தேடித்தரும்படி கேட்டேன். கைகளை விரித்துவிட்டார்கள். டென்டல் பிரிவின் உதவி முதல்வரைச் சந்தித்து வேலை கேட்டேன். என் நெருக்கடிநிலை புரியாமல், ஆறு மாதங்கள் கழித்து வரச் சொன்னார். பின்னர் பனராஸ் நகருக்குச் சென்றேன். வழி ஒன்றும் பிறக்கவில்லை. கொல்கத்தாவே தஞ்சம் என்று இங்கு வந்தேன். பல தொழிற்சாலைப் படிகளை ஏறி இறங்கினேன். ஆங்கிலப் பள்ளிக்கூடம் ஒன்றின் அருகில் தெருவோரத்தில் இரவைக் கழித்து வந்தேன். ஒருநாள் பெய்த மழையில் மின்கம்பி அறுந்து என் காலைப் பதம் பார்த்துவிட்டது. நடக்கவும் முடியவில்லை. அசாமில் அன்னை தெரேசா அவர்கள் பற்றிக் கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது. தயங்கித் தயங்கி அவர்களிடம் சென்றேன். என்னைப் பார்த்தவுடன் என் நிலையைப் புரிந்து கொண்டார்கள். நான் இறந்துகொண்டிருந்தேன் என்பது எனக்கே தெரியாமல் போய்விட்டது. காளிகாட் இல்லத்திற்கு என்னை எடுத்து வந்தார்கள். பெரியவர்களின் ஆசி என்னைப் பிழைக்க வைத்தது. புதுவாழ்வு பெற்றுவிட்டேன். நான் ஆதரவின்றி அனாதையாகத் தெருவில் செத்திருப்பேன்.. ஆனால் இவர்களால் என் நிலைமையே மாறிவிட்டது. வாழ்வதற்கு நம்பிக்கை பிறந்துவிட்டது என்றார் கோபால். மதத்தால் இந்து நான். ஆனால் இவர்கள் அது பற்றிக் கவலைப்படுவதில்லை.

அன்பர்களே, நம் வாழ்வும், பிறருக்கு நம்பிக்கையூட்டும் வாழ்வாக அமையட்டும்.       

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.