2016-08-08 15:28:00

வாரம் ஓர் அலசல் – புதிய பாதை அமைக்கப் புறப்படுவோம்


ஆக.08,2016. “துன்பம் வரும்போது கண்ணை மூடாதே. அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார், நீ அதை வென்றுவிடலாம்” என்று சொன்னார் நம் A.P.J. அப்துல் கலாம். இக்கூற்றுக்கு உயிர்கொடுத்திருக்கிறார், இந்தியாவின், திரிபுரா மாநிலத்தின் ஜிம்னாஸ்டிக்ஸ்(gymnastics) வீராங்கனை தீபா கர்மாகர்(Dipa Karmakar). இவர், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இது இந்தியாவுக்கு கிடைத்துள்ள வரலாற்று பெருமை மட்டுமின்றி வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. ஆங்கிலத்துக்குப் பதில், ஜிம்னாஸ்டிக்ஸ் படிக்கிறேன் என்று தந்தையிடம் வாக்கு கொடுத்ததற்காகப் பயிற்சிக்கு சென்றுவந்த இவர், 2007-ம் ஆண்டில் நடந்த தேசிய ஜூனியர் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்றதும், அவ்விளையாட்டின் மீது அவரது பார்வை சென்றுள்ளது. ஜிம்னாஸ்டிக்ஸில் தீபா குவித்துள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 77. இதில் 67 தங்கப்பதக்கங்களும் அடங்கும். விளையாட்டுகளிலேயே மிகவும் கடினமானதாக கருதப்படும் இதில், தீபா அதிகம் கலந்துகொள்வது ப்ராடுனோவா வால்ட் என்னும் பிரிவில்தான். வேகமாக ஓடிவந்து ஒரு திண்டின் மீது கைகளை வைத்து உயரே எழும்பி சம்மர் சால்ட்களை அடித்தவாறே தரையைத் தொடுவதுதான் இந்தப் போட்டியின் சிறப்பம்சம். சம்மர் சால்ட்களை அடித்தவாறு தரையை நோக்கி வரும்போது கொஞ்சம் பிசகினாலும் தலையில் அடிபட வாய்ப்புள்ளது. தவறுதலாக விழுந்தால் கை, கால்கள் செயலற்று போகவும் வாய்ப்புள்ளது. தீபா கர்மாகர் அவர்கள், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வாழ்த்துவோம். அன்பர்களே, அர்ச்சனா என்ற தன்னம்பிக்கைப் பெண்ணின் வெற்றிப் பயணம் பற்றியும் மனிதன் என்ற ஊடகத்தில் வாசித்தோம். அர்ச்சனா, இலங்கையிலிருந்து அகதியாக, டென்மார்க்கில் தஞ்சமடைந்து, தனது கடும் முயற்சியால், தற்போது பிரிட்டன் விமானத்தில் துணை விமானியாக பணியாற்றுகிறார். எதையும் நேர்மறையாக நோக்குபவரின் பார்வையில், குவளையில் நீர் அரைவாசி நிரப்பப்பட்டிருக்கும். ஆனால் எதிர்மறையாக நோக்குபவரின் பார்வையிலோ, குவளையில் அரைவாசி வெற்றிடமாக இருக்கும் என்பார்கள். அர்ச்சனா அவர்களின் பகிர்வைக் கேட்போம்..

பரபரப்பான மும்பையின் மாஹிம்(Mahim) பகுதியில் வாழ்ந்து வருபவர் ரஜனி பண்டிட்(Rajani Pandit). இவர், இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர். ஆண்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தும் இந்தத் துறையில், 25 வருடங்களுக்கு முன்னரே, தானாகத் துணிந்து இறங்கியவர் இவர். 1991ம் ஆண்டில், ரஜனி பண்டிட் அவர்கள், தனியார் துப்பறியும் நிறுவனம்(Rajani Pandit Private Detective Agency) ஒன்றைத் தொடங்கினார். அந்நிறுவனம் வழியாக, முப்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஒரு மாதத்திற்கு ஏறத்தாழ இருபது வழக்குகள் என்ற விகிதத்தில் கையாண்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல், பன்னாட்டு அளவிலான துப்பறியும் கிளைகளின் வழியாக, 75,000-க்கும் அதிகமான வழக்குகளையும் இந்நிறுவனத்தினர் விசாரித்து வருகின்றனர் என்று சொல்லப்படுகின்றது. இது 2010ம் ஆண்டின் நிலவரம். 1998ம் ஆண்டில் Times of India  இதழுக்கு அளித்த ஒரு நேர்காணலில் ரஜனி பண்டிட் அவர்கள், இவ்வாறு சொல்லியிருக்கிறார்.

குடும்பப் பிரச்சனைகள், நிறுவனங்களை உளவுபார்த்தல், காணாமல்போனவர்கள், கொலைகள் போன்றவைகளை,  இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் கையாண்டு வருகிறோம். இதற்குச் சில நேரங்களில் மாறுவேடத்திலும் செல்ல வேண்டிய கட்டாயம். வீட்டுப் பணிப்பெண்ணாக, பார்வையிழந்த பெண்ணாக, கருத்தாங்கிய பெண்ணாக, காது கேளாத பெண்ணாக.. இப்படி மாறு வேடங்களில் சென்று நான் குற்றங்களைத் துப்பறியும் வேலையைச் செய்திருக்கிறேன். ஒரு சமயம் ஒரு பெண் தனது கணவரின் கொலையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அதனால், அப்பெண்ணின் வீட்டில், ஆறு மாதங்கள், வேலைக்காரப் பெண்ணாக வேலை செய்தேன். இன்னொரு சமயம், தொழில் நிறுவனத்தில், இரண்டு மூத்த நிர்வாகிகள் பற்றி உளவு பார்ப்பதற்காக, மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் செயல்பட்டேன். எனது வேலைக்குக் கடின உழைப்பு அவசியம். எனது அகராதியில் அச்சம் என்ற சொல்லுக்கே இடம் இல்லை.... இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ள ரஜனி பண்டிட் அவர்கள், மேலும் சொல்கிறார்... என் தந்தை மஹாராஷ்டிர மாநில சி.ஐ.டி காவல்துறையில் பணிபுரிந்தார். மகாத்மா காந்தி கொலைவழக்கு விசாரணையில் பங்கேற்றவர் என் தந்தை. வழக்குகள் தொடர்பாக என் தந்தையைச் சந்திக்க பலர் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அவர்கள் பேசுவதை எல்லாம் நான் கூர்ந்து கவனிப்பேன். சில வழக்குகள் குறித்து தனிப்பட்ட முறையில் நான் என் தந்தையிடம் விவாதிப்பது உண்டு. கல்லூரியில் படிக்கும்போது என் வகுப்புத் தோழி ஒருவர், சில மாணவர்களுடன் சேர்ந்து புகைப்பிடிப்பது, மது அருந்துவது என தகாத பழக்கவழக்கங்களில் ஈடுபட்டார். நல்ல குடும்பத்துப் பெண், அப்படி தீயவழியில் செல்வதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அதை அவருடைய தந்தையிடம் தெரிவித்ததோடு, அவரை ஒரு வாடகைக் காரில் அழைத்துச் சென்று அவரது நடவடிக்கைகளை நேரடியாகக் காண்பித்தேன். அவர் தன் மகளைக் கண்டித்து நல்வழிப்படுத்தினார். ‘நல்ல சமயத்தில் உதவினாய். நீ இந்தப் பிரச்சனையை என்னிடம் கொண்டுவந்து சேர்த்த விதம், மிகவும் துணிச்சலானது. நீ துப்பறிவதைத் தொழிலாகச் செய்யலாமே?’ என்றார் தோழியின் அப்பா. அந்த வார்த்தைகள் என் மனதில் ஊறிக்கிடந்தன. கல்லூரிப் படிப்பை முடித்தபின், தற்காலிகமாக ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தேன். அப்போது என்னுடன் பணிபுரிந்த ஒரு பெண்ணின் குடும்பத்தில் நிகழ்ந்த நகைத் திருட்டைக் கண்டறிய களமிறங்கி, உண்மையை வெட்ட வெளிச்சமாக்கினேன். அப்போதுதான், துப்பறிவதற்கென்று பயிற்சியோ, சிறப்புத் தகுதியோ, கல்வியோ தேவையில்லை; மனதை ஒருமுகப்படுத்துவது, விடாமுயற்சி, துணிச்சல், உள்ளுணர்வு, துணிகரச் செயல்களைச் செய்யும் சாகசம், நெஞ்சுறுதி இவையெல்லாம்தான் வேண்டும் என்பதை உணர்ந்தேன். துப்பறிவதை முழுநேரத் தொழிலாகச் செய்ய முடிவெடுத்தேன்’

இப்படிச் சொல்லியுள்ள ரஜனி பண்டிட் அவர்கள், மறக்கமுடியாத ஓர் அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார். மஹாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரின் நண்பர் ஒருவர் என்னைத் தேடி வந்தார். தன் சொந்த சகோதரர் கொலை வழக்கை விசாரிக்கக் கோரினார். நான் அவரது வீட்டில் ஆறு மாதங்கள் பணிப்பெண்ணாக வேலை செய்தேன். அவருடைய தாயைச் சந்திக்க ஒரு நபர் அடிக்கடி வருவார். இரகசியமாக ஏதோ பேசிக்கொள்வார்கள். எவ்வளவோ முயற்சித்தும் அவர்கள் பேசுவதை என்னால் பதிவு செய்ய முடியவில்லை. ஒருநாள் அந்தத் தாய், அந்த நபரிடம், காவல்துறை தீவிரமாகக் கண்காணிப்பதால் இனி இங்கு வராதே’எனக் கூறினார். நான் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து, என் காலில் ரத்தம் வருமாறு கீறினேன். கத்தி தவறுதலாகக் காலில் விழுந்துவிட்டது எனக் கூற, அவர், கட்டுப் போட்டுக்கொண்டு வா’எனச் சொல்லி என்னை அனுப்பி வைத்தார். உடனே நான், வெளியேவந்து என் வாடிக்கையாளருக்குத் தொலைபேசியில் தகவலைத் தெரிவித்தேன். அவரும் காவல்துறையினருடன் விரைந்து வந்து அந்த நபரையும் தாயையும் கைது செய்தார். தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன’என்று சொல்லியுள்ளார் ரஜனி.

இவர் தன் அனுபவங்களைத் தொகுத்து Faces Behind Faces, Mayajal என இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவை நிறைய விருதுகளைப் பெற்றிருக்கின்றன. ‘‘சாதாரண மக்களில் இருந்து, பணக்காரர்கள், சமூகத்தில் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள் என, பலரும் இவரது வாடிக்கையாளர்கள். ரஜனி அவர்கள், தூர்தர்ஷன் வழங்கும் பெண் சாதனையாளர்களுக்கான ‘Hirkani’ விருதைப் பெற்றிருக்கிறார். தினகர் ராவ் என்பவர், இவரைப் பற்றி ‘லேடி ஜேம்ஸ்பாண்ட் என்ற குறும்படத்தை தயாரித்திருக்கிறார். இவர் பற்றிய இத்தகைய செய்திகளை விகடன் மற்றும் கூகுள் இணையத்தில் நாம் வாசிக்கலாம்.

அந்த வீதியில் நின்றிருந்த விலையுயர்ந்த கார் ஒன்றை, ஆசையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன். சிறிதுநேரம் கழித்து காருக்குச் சொந்தக்காரரான இளைஞர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் அந்தச் சிறுவனிடம், ‘‘இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது” என்றார் சிரித்தபடி. சிறுவன் முகத்தில் வியப்பு. உடனே, “உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” என்று கேட்டார் இளைஞன். ‘‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”என்று உடனடியாகப் பதில் சொன்னான் சிறுவன். அன்பர்களே, இத்தகைய மனிதர்களாகத் தானும் செயல்பட வேண்டும் என்று பதிலளித்த இச்சிறுவன் போன்று, வாழ்வில் சாதிக்கும் மனிதர்களாக வளர ஆவல் கொள்வோம். ஆம். ஒருவர் நடந்துபோகப் பாதை இல்லையே என்று கவலைப்படத் தேவையில்லை. அவரே நடந்தால் அதுவே ஒரு பாதையாக அமையும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.