2016-08-06 17:23:00

நாகசாகி, ஹிரோஷிமா நினைவு நாளுக்கு திருப்பீடச் செய்தி


ஆக.06,2016. ஒவ்வொருவரும் தங்கள் கடந்தகால பாவங்களையும் சோகங்களையும் எண்ணி முடங்கிப் போகாமல், இறைவனின் மன்னிப்பும் குணப்படுத்தலும் நம்மில் செயல்பட அனுமதிக்க அழைப்பு விடுக்கும் இந்த சிறப்பு யூபிலி ஆண்டில் இடம்பெறும் ஹிரோஷிமா, நாகாசாகி அணுகுண்டு தாக்குதலின் 71ம் ஆண்டு நினைவு குறித்து சிறப்புச்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை.

1945ம் ஆண்டு, ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகியில், ஆகஸ்ட் 6 மற்றும் 9 தேதிகளில் அணுகுண்டு வீசப்பட்டதன் 71ம் ஆண்டு நினைவையொட்டி ஹிரோஷிமாவில் நடைபெற்ற பல்சமய வழிபாட்டில், திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையில் பணியாற்றும் இயேசு சபை அருள்பணி  Michael Czerny அவர்கள் கலந்துகொண்ட வேளையில், 38 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் 6ம் தேதி இறைபதம் சேர்ந்த திருத்தந்தை, அருளாளர் 6ம் பவுல் அவர்கள், 1965ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி ஐ.நா. அவையில், போருக்கு எதிராக கூறிய கருத்துக்களை தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

‘ஒருவர் மற்றவருக்கு எதிராக ஒரு நாளும் செயல்படவேண்டாம், போர் மீண்டும் ஒருநாளும் வேண்டாம்’ என திருத்தந்தை 6ம் பவுல் விடுத்த அழைப்பை நினைவுகூர்ந்த அருள்பணி  Czerny அவர்கள், ஜப்பானில் அணு ஆயுத தாக்குதல் இடம்பெற்றதை நினைகூரும் நாம், அணு ஆயுத தாக்குதல், போர், பயங்கரவாதம் போன்றவைகளால் உலகம் முழுவதும் உயிரிழந்த மக்களுக்காக செபிப்போம் எனவும் கூறினார்.

மன்னிப்பு, ஒப்புரவு, ஒருமைப்பாடு, நம்பிக்கை என்ற இறைவரங்கள், ஒவ்வொரு மனிதரையும், மத சமூகங்களையும், சமூகக் குழுக்களையும் தொட வேண்டும் என இந்த சிறப்பு யூபிலி ஆண்டில் செபிப்போம் என மேலும் கூறினார், இயேசு சபை அருள்பணி Czerny.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.