2016-08-06 17:03:00

தினசரி வாழ்வில் இறை அன்பின் சாட்சிகளாக திகழுங்கள்


ஆக.06,2016. பிரேசில் நாட்டில் இம்மாதம் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை இடம்பெற உள்ள 17வது தேசிய நற்கருனை மாநாட்டிற்கு கர்தினால் Cláudio Hummes அவர்கள் வழியாக சிறப்புச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரேசில் நாட்டின் Belém நகரில் இடம்பெற உள்ள தேசிய நற்கருணை மாநாட்டிற்கு தன் பிரதிநிதியாக கர்தினால் Hummes அவர்களை நியமித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருக்கு அனுப்பியுள்ள செய்தியில், உலகம் முழுவதும் திரு அவைகளில் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்' என்ற இயேசுவின் கட்டளையை நிறைவேற்ற நாம் முயலும்போது, கடந்த காலங்களில் மறைப்பணியாளர்கள் எத்தகைய துன்பங்களைத் தாங்கி தங்கள் மறைபரப்புப் பணிகளை ஆற்றினார்கள் என்பதையும் மனதில் கொள்வோம் என தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

இறை இரக்கத்தை தியானித்தவர்களாக, நற்செய்திப் பணியை எடுத்துச் செல்லும் ஒவ்வொருவரும், இறை அன்பை மக்கள் உணரவும், அவர்கள் தங்கள் விசுவாசத்தை செபத்தின் வழியாக பலப்படுத்தவும், தினசரி வாழ்வில் இறை அன்பின் சான்றுகளாக விளங்கவும் உதவுவோம் என, மேலும் தன் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.