2016-08-05 14:46:00

மன்னிப்பு, விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லும் உறுதியான வழி


ஆக.05,2016. பழங்காலத்திலிருந்து வழங்கி வந்துள்ள ஒரு மரபின்படி, புனித பிரான்சிஸ், இதே இடத்தில் நின்று, கூடியிருந்த மக்களிடமும், ஆயர்களிடமும், "உங்கள் அனைவரையும் நான் விண்ணகத்திற்கு அனுப்ப விழைகிறேன்" என்று கூறியதை இன்று நினைவுகூருகிறேன் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அசிசி நகர் பயணத்தில் கூறினார்.

ஜூலை 4, இவ்வியாழன் மாலை, அசிசி நகரில் உள்ள விண்ணகத் தூதர்களின் புனித மரியா பசிலிக்காவின் நடுவே, அசிசி நகர் புனித பிரான்சிஸ் உருவாக்கியதாகச் சொல்லப்படும் Porziuncula சிற்றாலயத்திற்கு சென்று செபித்தபின், கூடியிருந்த மக்களிடம் திருத்தந்தை ஆற்றிய தியான உரையில் இவ்வாறு கூறினார்.

விண்ணகம் என்பது, இறைவனின் அன்பை எப்போதும் தியானித்தபடியே வாழும் உன்னத வாழ்க்கை என்பதை உணர்ந்தவர், புனித பிரான்சிஸ் என்று கூறிய திருத்தந்தை, விண்ணகத்திற்கு அனைத்து மக்களை அனுப்புவதை தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தவர், புனித பிரான்சிஸ் என்பதையும் எடுத்துரைத்தார்.

மன்னிப்பு வழங்குவதும், பெறுவதும் விண்ணகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் உறுதியான வழி என்பதை நாம் அறிந்தாலும், மன்னிப்பை வாழ்வில் செயல்படுத்துவது மிகக் கடினமான சவாலாக உள்ளது என்று, திருத்தந்தை தன் உரையில் விளக்கினார்.

இயேசு இன்று நமக்கு வழங்கிய நற்செய்தியில் (மத்தேயு 18:21-35), மன்னிப்பின் அவசியத்தைக் கூறியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நாம் ஒவ்வொருவரும் மன்னிக்கப்பட்டுள்ளோம் என்பதே, நாம் மற்றவர்களை மன்னிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று கூறினார்.

நாம் அனைவருமே இறைவனுக்கு அதிகம் கடன்பட்டவர்கள் என்பதை அறிவோம், இருப்பினும் இறைவன் நம்மை மன்னித்ததால், நம்மிடம் கடன்பட்டோரையும் மன்னிக்க அழைக்கிறார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தன் உடன் ஊழியரின் கடனை மன்னித்துவிட மனமின்றி, அவரது கழுத்தை நெரித்தப் பணியாளரைப் போலவே, நம் வாழ்விலும் பல அனுபவங்கள் இடம்பெறுகின்றன என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை" (மத். 18:22) என்பதே, கிறிஸ்தவ மன்னிப்பின் அளவுகோல் என்று வலியுறுத்தினார்.

வெறுப்பில் ஆழ்ந்திருக்கும் இவ்வுலகிற்குத் தேவையான ஒரு மருந்து, மன்னிப்பு என்றும், அந்த மன்னிப்பை பெறுவதற்கு, இரக்கத்தின் யூபிலி சிறந்த தருணம் என்றும், திருத்தந்தை, தன் தியான உரையின் இறுதியில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.