2016-08-05 15:11:00

திருத்தந்தையின் போலந்து பயணத்திற்கு அந்நாட்டு ஆயர்கள் நன்றி


ஆக.05,2016. போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் இடம்பெற்ற 31வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கு மேற்கொண்ட ஐந்து நாள் திருத்தூதுப் பயணத்திற்கு நன்றி கூறி, போலந்து ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Stanisław Gądecki அவர்கள் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

போலந்து நாடு திருமுழுக்கு பெற்றதன் 1050ம் ஆண்டையும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையும் கொண்டாடி வரும் வேளையில், திருத்தந்தை தங்கள் நாட்டுக்கு வருகை தந்தது, அன்பு, ஒற்றுமை, அர்ப்பணிப்பு என்ற அனைத்து பண்புகளுக்கும் ஓர் அடையாளமாக இருந்ததென்று பேராயர் Gądecki அவர்கள், இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பயணத்தின்போது திருத்தந்தை காட்டிய பரிவு, பணிவு, எளிமை ஆகிய பண்புகளுக்கு நன்றி கூறிய பேராயர் Gądecki அவர்கள், இந்தப் பண்புகள், திருத்தந்தையின் பணிக்காலம் முழுவதும் வெளியாகிவரும் அர்ப்பண உணர்வின் வெளிப்பாடுகள் என்று கூறியுள்ளார்.

உலக இளையோர் நாள் மற்றும் திருமுழுக்கின் 1050ம் ஆண்டு ஆகிய இரு வரங்களுக்கு இறைவனுக்கு நன்றி சொல்ல, போலந்து தலத்திருஅவை அக்டோபர் மாதம் வத்திக்கானுக்கு மேற்கொள்ளும் திருப்பயணத்தின்போது, திருத்தந்தைக்கு நேரில் நன்றி சொல்ல விழைவதாக பேராயர் Gądecki அவர்கள், இம்மடலின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.