2016-08-04 14:43:00

"போதிக்கச் செல்லும்போது வெறும் கால்களுடன் செல்லுங்கள்"


ஆக.04,2016. மறைபோதகர்கள் சபை என்ற பெயரில் பணியாற்றிவரும் புனித தோமினிக் சபையைச் சார்ந்தவர்கள், தங்கள் சபை உருவாக்கப்பட்டதன் 8ம் நூற்றாண்டைக் கொண்டாடி வருவதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித தொமினிக் சபையைச் சார்ந்த இரு பால் துறவியர், இத்தாலியின் பொலோஞா (Bologna) நகரில் மேற்கொண்டிருந்த பொது பேரவையின் இறுதியில், இவ்வியாழன் காலை, வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்க வந்திருந்தனர்.

70க்கும் மேற்பட்ட பொதுப் பேரவையின் உறுப்பினர்களிடம் உரையாடியத் திருத்தந்தை, எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை 3ம் ஒனோரியுஸ் அவர்கள், இச்சபையை உறுதி செய்ததை தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

உள்ளத்தில் பற்றியெரியும் இறைவார்த்தையை மக்களுக்குப் போதிக்க, தன் சீடர்களை இயேசு பணித்ததைப் போல், மறைப்போதகர்களின் சபையைச் சேர்ந்தவர்களும் பணிக்கப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, "முதலில் தியானிப்பீர், பின்னர் போதிப்பீர்" என்று இச்சபையை உருவாக்கிய புனித தோமினிக் கூறியதையும் நினைவுகூர்ந்தார்.

இறைவார்த்தையைத் தியானிப்பதற்கு முனையும் போதகர், மக்களை புரிந்துகொள்ளவும் முயலவேண்டும் என்று, 'நற்செய்தியின் மகிழ்ச்சி' என்ற தன் அறிவுரை மடலில் கூறியுள்ளதை திருத்தந்தை இவ்வுரையில் சுட்டிக்காட்டினார்.

"போதிக்கச் செல்லும்போது வெறும் கால்களுடன் செல்லுங்கள்" என்று புனித தோமினிக் கூறியது, "உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்" (விடுதலைப் பயணம் 3: 5) என்று, இறைவன், மோசேயிடம் கூறியதை நினைவுறுத்துகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

போதகர் ஒவ்வொருவரும் பிறரன்பில் தோய்ந்தவராக இருக்கவேண்டும், அல்லது, நமது போதனைகள், ஐயங்களை எழுப்பும் சொற்களாக மாறிவிடும் என்ற எச்சரிக்கையை திருத்தந்தை தன் உரையில் வழங்கினார்.

மனிதகுலத்தின் துயரங்களை உணராமல், இறைவார்த்தையைத் தியானிப்பது, கிறிஸ்துவின் காயப்பட்ட உடலைக் கண்டுகொள்ளாமல், வெறும் மேல் தோலை மட்டும் காண்பதற்கு ஒப்பாகும் என்பதை, புனித தோமினிக் கூறிய வார்த்தைகளுடன் இணைத்து கூறினார், திருத்தந்தை.

தொமினிக்கன் துறவு சபையின் பாதுகாவலரான செபமாலை அன்னை மரியா, இச்சபையை தொடர்ந்து அரவணைத்து காக்க தான் மன்றாடுவதாக, திருத்தந்தை தன் உரையின் இறுதியில் கூறி, பொதுப் பேரவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆசீர் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.