2016-08-04 15:33:00

பிலிப்பீன்ஸ் அரசுத் தலைவருக்கு தலத்திருஅவை பாராட்டு


ஆக.04,2016. தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தி, பிலிப்பீன்ஸ் அரசுத் தலைவர், ரொட்ரிகோ துத்தெர்த்தே (Rodrigo Duterte) அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தலத்திருஅவை பாராட்டியுள்ளது.

நாட்டில் இயங்கிவரும் பல தொழில் நிறுவனங்கள், தன்னிச்சையாக, தொழிலாளர்களின் ஒப்பந்தங்களை மாற்றுவதும், பணிநீக்கம் செய்வதும் நிறுத்தப்படவேண்டும் என்று, அரசுத் தலைவர் கூறிவருவது போற்றுதற்குரியது என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Brodrick Pabillo அவர்கள் கூறியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் அரசு, தொழில் நிறுவனங்களை சார்ந்திராமல், தொழிலாளர்களைச் சார்ந்திருப்பது, நம்பிக்கை தரும் அடையாளம் என்று, ஆயர் பேரவையின் செயலர்களில் ஒருவரான Jerome Secillano அவர்கள் கூறியுள்ளார்.

தொழிலாளர்களை மையப்படுத்தி, பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கின் இறுதியில், தொழிலாளர் நலன் குறித்த பத்து பரிந்துரைகள், அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.