2016-08-04 15:08:00

பிரான்சிஸ்கன் துறவு குழுமத்தின் உலகத் தலைவர்களின் மடல்


ஆக.04,2016. "நம் உலகம் ஏங்கித் தவிக்கும் அமைதியைக் கொணர நாம் வாழும் நூற்றாண்டு தகுந்த முயற்சிகளை எடுக்கவில்லை என்ற வெட்கம், நம்மை அமைதி முயற்சிகளை மேற்கொள்ள தூண்டவேண்டும்" என்ற வார்த்தைகளை, பிரான்சிஸ்கன் துறவு குழுமத்தின் நான்கு முக்கிய சபைகளின் உலகத் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு மடலில் கூறியுள்ளனர்.

அனைத்து மனிதர்களும் மீட்படையவேண்டும் என்ற தணியாத தாகத்தால், 1216ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி, புனித பிரான்சிஸ், இறைவனிடம் மன்றாடி, பரிபூரணப்பலனைப் பெற்ற சிறப்பு நிகழ்வின் 8ம் நூற்றாண்டு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, பிரான்சிஸ்கன் உலகத் தலைவர்கள் இணைந்து ஒரு மேய்ப்புப்பணி மடலை வெளியிட்டுள்ளனர் என்று, பீதேஸ் (Fides) செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

அசிசி மன்னிப்பு, அல்லது Porziuncola பரிபூரணப் பலன் என்றழைக்கப்படும் இந்த சிறப்பு அனுபவத்தை, புனித பிரான்சிஸ் அடைந்த சிற்றாலயம், விண்ணகத் தூதர்களின் அன்னை மரியா பசிலிக்காவில் அமைந்துள்ளது. இந்தச் சிற்றாலயத்திற்கு, இவ்வியாழன் பிற்பகல் நான்கு மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று, செபித்தார்.

இறை இரக்கத்தின் முழு வெளிப்பாடான பரிபூரணப் பலன் வழங்கப்பட்ட 8ம் நூற்றாண்டு நிறைவு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்ட  இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் நிகழ்வது பொருத்தமான அடையாளமாக உள்ளது என்று, பிரான்சிஸ்கன் சபைகளின் உலகத் தலைவர்கள், இம்மடலில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.