2016-08-04 14:38:00

இது இரக்கத்தின் காலம் : பிறர் பொருளுக்கு ஆசைப்படும் பேராசை


ராமு, சோமு, அம்மு, பொம்மு என்று நான்கு குரங்குகள் இருந்தன. அவை ஒருநாள்  அருகிலுள்ள பழத்தோட்டத்திற்குள் நுழைந்தன. அங்கே பறித்து வைத்திருந்த பழங்களைக் கூடையோடு திருடி தூக்கிக் கொண்டு தங்கள் வாழ்விடத்திற்குச் சென்றன. அப்போது, அப்பழக்கூடையை, ஆளுக்கு கொஞ்ச நேரமாக தலையில் சுமந்து வந்தன. அந்த வழியில் ஒரு மரத்தடியில் பஞ்சுமிட்டாய் விற்பவர் படுத்து இருந்தார். அவர் தலைக்குப் பக்கத்தில் கூடை நிறைய பஞ்சுமிட்டாய் இருந்தது. பஞ்சுமிட்டாய் வியாபாரி பயணக்களைப்பில் நன்றாகத் தூங்கிவிட்டார். பழக்கூடையைத் தூக்கிவந்த குரங்களுக்கு பஞ்சுமிட்டாயைப் பார்த்ததும் அதையும் சாப்பிட வேண்டும் என்று ஆசை வந்தது. “அந்தப் பஞ்சுமிட்டாய் ரொம்ப இனிப்பாக இருக்கும். எனக்கு அதைச் சாப்பிட ஆசையாக இருக்கு”என்றது ராமு குரங்கு. ஆமாம், ஆமாம்... எத்தனை நாளைக்குத்தான் பழங்களையே தின்பது, இன்று பஞ்சுமிட்டாய் சாப்பிடுவோம்” என்றது சோமு. “அந்த பஞ்சுமிட்டாய் விற்பவர் நன்றாகத் தூங்குகிறார், அவைகளைக் கூடையோடு தூக்கிச் சென்றுவிடலாம்”என்றது அம்மு. “நாம் முதலில் இந்தப் பழங்களை நம் இருப்பிடம் கொண்டு சென்றுவிடுவோம். பிறகு வாய்ப்பு கிடைத்தால் பஞ்சுமிட்டாயைத் திருடலாம். அவர் அருகிலேயே படுத்து இருக்கிறார். நாம் பிடிபட்டால் தொலைத்துவிடுவார்” என்றது பொம்மு குரங்கு. “பொம்மு சொல்வதும் சரிதான். நாம் பழங்களை வீட்டில் வைத்துவிட்டு வருவோம்” என்றது அம்மு. “இல்லை...இல்லை... அவர் நன்றாகத் தூங்குகிறார். இப்போதே பஞ்சு மிட்டாயை எடுத்துவிட வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தன, ராமுவும் சோமுவும். அவை இரண்டும், பஞ்சுமிட்டாய் கூடையைத் தூக்கிக் கொண்டு ஓடின. அம்முவும், பொம்முவும் பழக்கூடையைச் சுமந்து கொண்டு சென்றன. சில நிமிடங்களில் கண்விழித்த வியாபாரி, பஞ்சுமிட்டாய்க் கூடை காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தூரத்தில் குரங்குகள் பஞ்சுமிட்டாய் கூடையைக் கொண்டு செல்வதைக் கண்டார். ‘ஏய் திருட்டுக் குரங்குகளா, என் பஞ்சுமிட்டாயையாத் திருடிச் செல்கிறீர்கள், உங்கள் மண்டையை உடைக்கிறேன் பாருங்கள்’ என்று கற்களை எடுத்து அவைகள் மீது வீசி எறிந்தார். கல்லடிபட்ட குரங்குகள் இரு கூடைகளையும் போட்டுவிட்டு பிழைத்தால் போதுமென்று அலறிக் கொண்டே ஓடின. பஞ்சுமிட்டாய் வியாபாரி, ‘குரங்குகளால் எனக்கு ஒரு கூடை பழம் லாபம்’என்று பஞ்சுமிட்டாயுடன் பழக்கூடையையும் தூக்கிச் சென்றார். பின்னர் குரங்குகள்,“சரிதான் நாம் பேராசைப் பட்டோம், பெருநஷ்டம் அடைந்தோம்” என்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.