2016-08-04 15:23:00

Rouen பேராலயத்தில் அருள்பணி Jacques Hamel அடக்கச் சடங்கு


ஆக.04,2016. மரணத்திற்கு இறுதி வெற்றி இல்லை என்பதை, அருள்பணி Jacques Hamel அவர்கள் தன் மரணத்தால் நிரூபித்துள்ளார் என்று, Rouen உயர் மறைமாவட்ட பேராயர், Dominique Lebrun அவர்கள் கூறினார்.

ஜூலை 26ம் தேதி, தீவிரவாதிகள் இருவரால் திருப்பலி நேரத்தில் கொல்லப்பட்ட அருள்பணி Hamel அவர்களின் அடக்கச் சடங்குகளை, இச்செவ்வாய் மாலை, Rouen பேராலயத்தில் தலைமையேற்று நடத்திய பேராயர் Lebrun அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர் என்று ஏறத்தாழ 2000 பேர் கலந்துகொண்ட இந்த இறுதி அடக்கச் சடங்கில், அருள்பணி Hamel அவர்களுடன் பிணையக் கைதிகளாகப் பிடிபட்ட மூன்று அருள் சகோதரிகளும், மற்றும் இரு பொதுநிலையினரும் கலந்துகொண்டனர்.

86 வயது நிறைந்த அருள்பணி Hamel அவர்களின் தங்கை உட்பட, இன்னும் பல நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்ட இத்திருப்பலியில், உன்னதமான ஓர் அருள் பணியாளரை திருஅவைக்கு வழங்கிய அக்குடும்பத்தினருக்கு, பேராயர் Lebrun அவர்கள், தன் நன்றியைத் தெரிவித்தார்.

அக்குடும்பத்தினர் சார்பில் பேசிய Jessica அவர்கள், அருள்பணி Hamel அவர்களைப் போலவே தானும், வெறுப்புக்குப் பதில் அன்பு கொள்வதற்கும், பிறரை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்குப் பதில், மரியாதையுடன் பார்ப்பதற்கும் தீமானித்திருப்பதாகக் கூறினார்.

அருள்பணி Jacques Hamel  அவர்களின் நினைவாக, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் ஜூலை 31ம் தேதி, ஞாயிறன்று, பல கத்தோலிக்க ஆலயங்களில், கத்தோலிக்கரும், இஸ்லாமியரும் இணைந்து வழிபாடுகளில் கலந்துகொண்டு, அமைதிக்காக செபித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.