2016-08-03 16:21:00

வன்முறை என்ற நஞ்சை முறியடிக்கும் மருந்து, நம்பிக்கை


ஆக.03,2016. வன்முறை என்ற நஞ்சை முறியடிக்கும் சிறந்த மருந்து, நம்பிக்கை என்று, தென் சூடான் நாட்டின் ஆயர் ஒருவர், தன் மக்களுக்கு அனுப்பியுள்ள மடல் ஒன்றில் கூறியுள்ளார்.

தென் சூடான் நாட்டில் தொடர்ந்துவரும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அந்நாட்டின் ஆயர் பேரவையின் பலசமய உரையாடல் - அமைதிப் பணிக்குழுவின் தலைவர், ஆயர், Barani Eduardo Hiiboro Kussala அவர்கள் அனுப்பியுள்ள மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐந்து வயதே நிரம்பிய தென் சூடான், ஒரு நாடாகத் திகழமுடியுமா என்ற கேள்வி உலக நாடுகளிடையே நிலவிவருவத்தைச் சுட்டிக்காட்டிய ஆயர் Kussala அவர்கள், இதுபோன்ற ஐயங்களுக்கு, நாட்டின் ஒற்றுமை ஒன்றே தகுந்த பதிலாக அமைய முடியும் என்று கூறினார்.

ஐரோப்பா, அமெரிக்க ஐக்கிய நாடு, ஆசியா ஆகியவை, தங்கள் நாடுகளில் நிகழ்ந்துவரும் வன்முறைகள் மீது கவனம் செலுத்திவருவதால், தென் சூடான் நாட்டின் மீது அவற்றின் கவனம் திரும்பவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர் Kussala அவர்கள், இவ்விதம் தென் சூடானின் நிலைமை கவனிப்பாரற்று விடப்பட்டால், இங்கிருந்து வெளியேறும் மக்களை இந்நாடுகள் வரவேற்க வேண்டிய கட்டாயம் உருவாகும் என்று கூறினார்.

இத்தனை கொடுமைகள் நடுவிலும், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் துயர் துடைப்புப் பணிகள் நம்பிக்கை தருகின்றன என்ற வார்த்தைகளுடன், ஆயர் Kussala அவர்களின் மடல் நிறைவு பெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.