2016-08-03 15:34:00

மறைக்கல்வியுரை : நம்பிக்கையின் இறைவாக்கு அடையாளம், இளையோர்


ஆக.,03,2016. ஆகஸ்ட் மாதம், இத்தாலியில் கடும் கோடைக்காலம் நிலவுவதால், இம்மாதத்தில் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைகள் அனைத்தும் திருத்தந்தை அருளாளர் 6ம் பவுல் அரங்கிலேயே இடம்பெற உள்ளன. ஆகஸ்ட் மாதத்தின் இந்த முதல் புதன்கிழமையன்று, அந்த அரங்கம் நிரம்பி வழிய, 31வது உலக இளையோர் நாளை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் போலந்தில் மேற்கொண்டு திரும்பிய தன் ஐந்து நாள் திருத்தூதுப் பயணத்தைக் குறித்தே புதன் மறைக்கல்வி உரையை வழங்கினார்.

போலந்தின் இரும்புத் திரைகள் வீழ்ச்சியடைந்ததைத் தொடந்து, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அந்நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப்பயணத்தின் 25 ஆண்டுகளுக்குப் பின் என் திருப்பயணம் அந்நாட்டில் கடந்த வாரத்தில் இடம்பெற்றது. கடந்த 25 ஆண்டுகளில், போலந்து, ஐரோப்பா மற்றும் உலகில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் இளையோரோ, இன்னும் வருங்காலத்திற்கான நம்பிக்கையின் இறைவாக்கு அடையாளமாக உள்ளனர். இத்திருத்தூதுப் பயணத்தின்போது அவர்கள், தங்கள் நாடுகளின் கொடிகளை கைகளில் ஏந்தி அசைத்துக்கொண்டு, நற்செய்தியின் சவால்களுக்கு மகிழ்ச்சியுடன் பதிலளிப்பவர்களாக, உடன்பிறந்தோர் உணர்வின் பலவண்ண சித்திர வேலைப்பாடுடைய கலை வடிவில் நின்றதைக் கண்டேன். வளமை நிறைந்த ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்ட போலந்து நாடு, நமக்கு ஓர் உண்மையை சுட்டிக்காட்டி நிற்கின்றது, அதாவது, ஐரோப்பா, எந்த மதிப்பீடுகளால் கட்டியெழுப்பப்பட்டதோ, அந்த மதிப்பீடுகளின் வழியாக அன்றி, அதற்கு வருங்காலம் இல்லை என்பதே அந்த செய்தி.  மனிதனைக் குறித்த கிறிஸ்தவ கண்ணோட்டத்தை மையமாகக் கொண்டதாகவும், கடந்த நூற்றாண்டில் புனித பவுஸ்தினா, மற்றும், புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் உரத்த விதத்தில் வெளிப்படுத்திய இரக்கத்தின் செய்தியை உள்ளடக்கியதாகவும், இந்த மதிப்பீடுகள் உள்ளன. Auschwitz-Birkenau வதைப்போர் முகாமில் அமைதியாக நின்று, அப்பகுதியில் இடம்பெற்ற துயர நிகழ்வுகளை அசை போட்டேன். அங்கு பலியானவர்களை நினைவு கூர்ந்தேன். அத்தீமைகளின் படுபாதாளத்திலும் உணரவைக்கப்பட்ட இறை இரக்கத்தை என்னால் உணரமுடிந்தது. வன்முறை, பகைமை மற்றும் மோதல்களால் சிதைந்து போயிருக்கும் இக்காலத்தில், பழங்கால நினைவுகள், ஓர் எச்சரிக்கையாகவும் நம் பொறுப்புணர்வை உணர்த்துவதாகவும் செயல்படுகின்றன. போலந்திற்கும், ஐரோப்பாவிற்கும், இவ்வுலகிற்கும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளத்தை வழங்கிய இத் திருத்தூதுப்பயணத்தை ஏற்பாடு செய்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியத் திருத்தந்தை, போலந்து திருப்பயணிகளை நோக்கி தனிப்பட்ட முறையில் தன் நன்றியை வெளியிட்டார். போலந்து மக்களுக்கும், திருஅவைக்கும், அரசுத்தலைவர் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் தன் நன்றியை தெரிவிப்பதாகவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். இச்செவ்வாயன்று காலை, போலந்தில் உயிரிழந்த கர்தினால் மக்சார்ஸ்கியை, தான் இத்திருப்பயணத்தின்போது மருத்துவமனையில் சென்று பார்வையிட முடிந்தது குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, இந்த உலக இளையோர் தினத்தில் பங்கு கொண்ட இளையோர் அனைவரும், இறை இரக்கத்தை உலகிற்கு எடுத்துச் செல்லும் சாட்சிகளாக இருப்பார்களாக என்ற ஆவலையும் வெளியிட்டார்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியா, இந்தோனேசியா, கானடா, அமெரிக்க ஐக்கிய நாடு, அயர்லாந்து என பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி அவர்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.