2016-08-03 15:27:00

பானமா உலக இளையோர் நாள் குறித்து அந்நாட்டு கர்தினால்


ஆக.03,2016. வறியோர், மற்றும் சமுதாயத்தின் ஓரங்களில் வாழ்வோர் மீது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுள்ள ஈடுபாடு, அடுத்த உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களுக்கு பானமா நாடு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று, பானமா நாட்டுக் கர்தினால், José Luis Lacunza Maestrojuán அவர்கள் கூறினார்.

2019ம் ஆண்டு நடைபெறவிருக்கும் 34வது உலக இளையோர் நாள் கொண்டாட்டங்கள், பானமா நாட்டில் நடைபெறுவது குறித்து, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில், கர்தினால் Maestrojuán அவர்கள் இவ்வாறு கூறினார்.

சமுதாயப் பிரச்சனைகளை திருஅவையின் அங்கமாக்கிய அருளாளர் ஆஸ்கர் ரொமெரோ அவர்கள், பானமா நாட்டில் நடைபெறும் உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களுக்கு, ஒரு முக்கிய அடையாளமாக விளங்குவார் என்று கர்தினால் Maestrojuán அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

பானமா தலத்திருஅவை, இளையோரை அதிகம் கொண்டிருப்பது, இந்தக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு மற்றொரு உந்து சக்தியாக அமையும் என்று தான் நம்புவதாக கர்தினால் Maestrojuán அவர்கள் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.