2016-08-03 15:48:00

சிறுவர், சிறுமியரும், ஆயுதம் தாங்கிய மோதல்களும்


ஆக.03,2016. 2014, 2015 ஆகிய இரு ஆண்டுகளிலும், ஆயுதம் தாங்கிய போர்களில் சிறுவர், சிறுமியர் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது இவ்வுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

‘சிறுவர், சிறுமியரும், ஆயுதம் தாங்கிய மோதல்களும்’ என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவை, இச்செவ்வாயன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பாகப் பங்கேற்ற அருள்பணி Simon Kassas அவர்கள், வயதில் மிகவும் குறைந்த சிறுவர், சிறுமியர் தற்போது அனுபவித்து வரும் கொடுமைகள் அதிர்ச்சியைத் தருகின்றன என்று கூறினார்.

இன்றைய தலைமுறை, சிறுவர் சிறுமியருக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறியதன் விளைவுகளை, வருங்காலம் சந்தித்தே தீரவேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளதை, அருள்பணி Kassas அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படும் வன்முறை குழுக்களின் பிடியிலிருந்து சிறுவர் சிறுமியரைக் காப்பாற்றும் அரசு அதிகாரிகள், அக்குழந்தைகளுக்கு, தகுந்த பாதுகாப்பு தராமல் போவது, அவர்களுக்கு இழைக்கக் கூடிய மற்றொரு அநீதி என்று, அருள்பணி Kassas அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

ஆயுதம் தாங்கிய மோதல்களில் மட்டும் அல்ல, மாறாக, மனித வர்த்தகம், போதைப்பொருள் வர்த்தகம், பாலியல் கொடுமைகள், குழந்தைத் தொழில் என்று, சிறுவர், சிறுமியருக்கு எதிராக பலுகியுள்ள குற்றங்கள் அனைத்திலிருந்தும் இளைய தலைமுறையினர் விடுதலை பெறுவதை திருப்பீடம் வலியுறுத்துகிறது என்று, அருள்பணி Kassas அவர்கள், தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.