2016-08-03 15:25:00

இரக்கத்தின் தூதர்கள் – அருளாளர் அன்னை தெரேசா பாகம் 9


ஆக.,03,2016. "கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!" என்பது கீதாச்சாரம். அதாவது, ஒருவர் தன் அடிப்படை கடமையைச் செய்வதற்குக்கூட அதன் மூலம் தனக்கு ஒரு இன்பம், சுகம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது. எடுத்துக்காட்டாக, சிறு குழந்தைகளை, பெற்றோர் காப்பாற்றுவதும், வயதான பெற்றோரை குழந்தைகள் காப்பாற்றுவதும் அவரவர் கடமை. அதில் ஒரு பலனை எதிர்பார்ப்பது தவறானது. அதேபோல், ஏதாவது ஒரு செயலை ஆற்றும்போது, இந்தச் செயலை செய்வதால் எனக்கு இந்தப் பலன்தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்துச் செய்வதும் தவறானது. பிறருக்கு உதவி செய்வதில்கூட பலனை எதிர்பார்க்கக் கூடாது என்பதுதான் கீதையின் போதனை. தனது சொந்த ஆதாயங்களைத் தேடாது, பிறருக்கு உதவுவது சிறந்தது. இப்படி வாழ்ந்த மாமனிதர்கள் வரிசையில் நிற்பவர் நம் அருளாளர் அன்னை தெரேசா. இவர் பலனை எதிர்பார்க்காமல் தனது கடமையைச் செய்தவர். ஏனென்றால் தான் செய்யும் பணி கடவுள் பணி என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். அன்னை தெரேசா அவர்கள், ஒருமுறை ஒரு பேட்டியில் சொன்னார் - எனக்கு வேலை முக்கியமல்ல. அதன் பலன்கள் பற்றியும் அக்கறை இல்லை. ஏனென்றால் நாங்கள் செய்வது, அன்புப் பணியாக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன். அரசிடம் பணம் வாங்கினால், நாங்கள் செய்யும் அறப்பணிக்கு ஊதியம் பெறுவதாய்ப் பொருளாகிவிடும். என்னைப் பார்க்க வருகின்ற பல இளைஞர்கள், இன்றைய உலக நிலை பற்றிக் கவலைப்படுகின்றனர். வறுமைப் பிரச்சனை, அவர்களுக்கு ஒரு சவாலாக அமைந்து விடுகிறது. ஏழை மக்களோடு ஒன்றாகக் கலந்துவிட வேண்டுமென்று விரும்புகின்றனர். அதனால் பல இளையோர் எனது சபையில் சேருகின்றனர் என்று.    

அன்னை தெரேசா அவர்களின் குரல், ஒரு மோகன கீதம். அது கேட்பவர்களை மெய்மறக்கச் செய்யும். அவரது ஒளிவீசும் கண்கள் சக்தி வாய்ந்தவை. யாவரையும் தன்பால், தன் சேவையின்பால், தர்மத்தின்பால் கவர்ந்திழுக்கும் தெய்வீக வல்லமை மிகுந்தவை. அன்னையின் தூய இதயம் இயேசுவுக்கே அர்ப்பணிக்கப்பட்டதால், அதனின்று வெளிப்படும் அன்பலைகள், அக்ஷரேகைகளைத் தாண்டி, நாடுகளின் கலாச்சார வேறுபாடுகள், முரண்பாடுகளைக் கடந்து, உலகையே தன்பக்கம் ஈர்த்துக் கொண்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள அன்னை தெரேசா சபையின் இல்லங்கள் அன்பு மயமானவை. இந்த இல்லங்கள் தோன்றுவதற்குக் காரணம், உலகத்தின் புறக்கணிப்பு கலாச்சாரம். அன்பு வற்றிப்போன, அன்பு பாராட்ட மறுக்கும் சமுதாயமே இதற்குக் காரணம். இந்த உலகம் முழுவதும் அன்புமயமாகும்வரை, இத்தகைய இல்லங்கள் பிறக்கும், வளரும். அன்னைக்கு எப்போதும், எதிலும், பேச்சைவிட செயலே முக்கியம்.    அவர் தெருவில் நடந்தோ அல்லது காரிலோ போகும்போது, எங்கு சென்றாலும், எந்நேரத்திலும், அவரின் கண்களும், செவிகளும் தயார் நிலையிலேயே இருக்கும். அவரின் கூர்மையான பார்வையும், செவிகளும், தெருவின் இரு புறங்களின் மீதே இருக்கும். கனமழையிலும், ஒரு முனகல் சப்தம் கேட்டால் போதும். அன்னையின் கார் அந்த இடத்திலேயே நின்றுவிடும். அடுத்த நிமிடமே, முனகலுக்குரிய மனிதரின் உயிர் பரிசோதிக்கப்பட்டு, முதலுதவி  அளிக்கப்படும். அந்த உதவி, மருந்தாகவும் இருக்கலாம் அல்லது அந்த உயிருக்குத் தேவைப்பட்ட ஒரு கிண்ணம் பாலாகவும் இருக்கலாம். அந்த மனிதரின் நிலைமைக்கு ஏற்ப உதவிகள் வழங்கப்படும். அந்த மனிதருக்குத் தேவைப்பட்டால் அவரைத் தன்னோடு காரில் ஏற்றிச் சென்று உதவுவார் அன்னை. உடல் நலமடைந்த பின்னர், அந்த நபர் விரும்பினால் அந்த இல்லத்தைவிட்டுச் செல்லலாம் என்று சொல்கிறார்கள்.

அன்னை தெரேசா அவர்கள் 1978ம் ஆண்டில், ஒருநாள், தனது கடவுள் அனுபவம் பற்றியும் ஒருவரிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார். நான் ஒவ்வொரு மனிதரிலும் கடவுளைப் பார்க்கின்றேன். ஹான்சென் நோயாளரின் புண்களைக் கழுவும்போது, ஆண்டவருக்கே சேவை செய்கிறேன் என்று உணர்கிறேன். இது எவ்வளவு அழகான அனுபவம் இல்லையா? என்று கேட்டிருக்கிறார். உணவின்றி வாடியவனும் நானே. தாகமுடன் தவித்தவனும் நானே என்று இயேசு கூறியது, ஏமாற்று சொற்கள் இல்லை. நிராதரவாக, கைவிடப்பட்ட கடைப்பட்டவர்களின் விழிகளில்தான் உண்மையான தெய்வ சந்நிதானத்தைத் தரிசிக்க முடியும். தெருவோரங்களில் பசியாலும், நோயாலும் வீழ்ந்து கிடப்பவர்கள்தான் என் கண்கண்ட தெய்வங்கள். அதனால்தான் யாருடைய அங்கீகாரமும் தேடி நாங்கள் இந்தப் பணியைச் செய்யவில்லை. எனவே சோர்வடையவும் இல்லை என்று சொல்லியுள்ளார் அன்னை தெரேசா.

அந்தப் பேட்டியின்போது அன்னை மேலும் சொன்னார்கள் - பல ஆண்டுகளுக்கு முன்னர், தெருவோரங்களில் யாராவது இறந்துகொண்டிருந்தால், யாருமே அவர்களுக்கு உதவ முன்வரமாட்டார்கள். தங்கள் வழியே போய்விடுவார்கள். ஆனால் இக்காலத்தில் அப்படி இறப்பவர்களை யாரும் புறக்கணிப்பதில்லை. உடனே தொலைபேசியில் அவசர சிகிச்சை மருத்துவ வண்டியை அழைத்து, இங்கு காளிகாட் நிர்மல் ஹிர்தய இல்லத்தில் கொண்டுவந்து சேர்த்துவிட முயற்சி செய்கின்றார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்டவர்கள், இன்று அரவணைக்கப்படுகிறார்கள். சிசுபவனத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் குழந்தைகளைப் பலர் தத்து எடுக்கிறார்கள்.

மனிதர் இறப்பதற்கு தகுந்த இடம், மனிதருக்காக மனிதர் இறக்கும் இடமே என்றார் எம்.ஜே. பாரி. அன்னை தெரேசா அவர்களின் பணி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது. அவர்கள் பணியில் மதமாற்றம் நடப்பதில்லை. இறந்தவர்களின் உடல்களுக்கு, அவரவர் மத ஆசாரப்படி இறுதிச் சடங்குகள் செய்ய முழு உரிமை உண்டு. அன்பர்களே, வாழ்க்கையின் ஒரே உண்மை இறப்புதானே. அன்னையின் கொல்கத்தா காளிகாட் தர்மசாலாவில் பார்த்த தனது அனுபவத்தை இயேசு சபை அருள்பணி சேவியர் அல்போன்ஸ் அவர்கள் இப்படிச் சொல்கிறார் –

நான் அங்கு சென்ற சமயம், இறுதி யாத்திரைக்குத் தயாராகிக்கொண்டிருந்தார் பெயர் தெரியாத ஒருவர். தெருவோரத்து நாயகர்தான் அவரும். அருள்சகோதரிகள், அந்த மனிதரின் கடைசிப் போராட்டத்தில் பங்கு போட்டுக்கொண்டிருந்தனர். குளூக்கோஸ், குழாய் வழியாக ஏற்றப்பட்டிருந்தது. கண்களால் ஜாடை காட்டினார் அந்த மனிதர். அருள்சகோதரி ஒருவர் குனிந்து அவர் சொல்வதைக் கேட்டார்கள். அவர் உதடுகளில் சாந்தமான புன்னகை. இந்தச் சமூகம் அவருக்கிழைத்த கொடுமைகள், அவருடைய இயலாமை, ஏழ்மை அத்தனையும் அவரைவிட்டுப் பறந்து ஒருவிதமான அன்புப் பிரவாகம் மட்டுமே நடனம் ஆடியது. கண்கள் மூடிவிட்டன. சிறிதுநேரம் மெய்மறந்து அந்த சடலத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். காளிகாட் வீதிகளின் பரபரப்பு, எங்கோ தொலைதூரத்தில் சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது. வாழ்க்கை நிழலாட்டத்தில் இத்தனை போலித்தனங்களா? மெய்மறந்து நின்ற என்னை அருகில் நின்ற அருள்சகோதரியின் குரல் அந்த இடத்திற்கு மீண்டும் அழைத்து வந்தது. இவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? தெருவில் உயிர்விட்டிருந்தால் எத்தனை வேதனைப்பட்டிருப்பேன். இப்பொழுது எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா என வங்காள மொழியில் சொன்னார் என்றார் அருள்சகோதரி. உண்மைதான். வெறும் சடமாக வாழ்வதைவிட, நிம்மதியான சாவு எத்துணை மேலானது.

அறிஞர் பேகன் சொன்னார் – ஆன்மாவின் பெருந்தன்மை என்பது, எத்தனை சந்தர்ப்பங்களில் நாம் இரக்கம் காட்டுகிறோம் என்ற அளவைப் பொறுத்ததே என்று. உருக்குலைந்த கரங்களுக்கும், சுருங்கிப்போன முகங்களுக்கும், அரிக்கப்பட்ட கால்களுக்கும், இவைகளைச் சுமக்கும் உளுத்துப்போன உடல்களுக்கும் தேவையானது அன்பு ஒன்றே. இவர்களுக்கு ஆறுதலளிப்பது அன்பு கனிந்த சொற்களும், யாரும் தங்களை வெறுக்கவில்லை, ஒதுக்கவில்லை என்பதைக் காட்டக்கூடிய ஒப்புயர்வற்ற மனிதத் தொடுதலுமே ஆகும். மக்கள் தங்களின் சொந்த வீட்டிலும், வெளியிலும் கிடைக்கப்பெறாத அன்பையும், ஆதரவையும் அன்னை தெரேசாவின் இல்லங்களில் பெறுகிறார்கள். இயேசு சொல்கிறார் – ஒடுக்கப்படுபவரும் நானே, தொழுநோயாளரும் நானே என்று. நம்முடன் வாழும் ஒவ்வொருவரிலும் கடவுளைக் காண்போம். அன்பில் வாழ்ந்து அன்பில் வளர்வோம்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.