2016-08-02 16:26:00

பாகிஸ்தானின் மதநிந்தனைச் சட்டமும் பயங்கரவாதமும்


ஆக.,02,2016. இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை கிழித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் பாகிஸ்தானில் இந்து மதத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதட்ட நிலைகளில், 17 வயது இந்து இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதற்கு பாகிஸ்தான் தலத்திரு அவை தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் Ghotki மாவட்டத்திலுள்ள Mirpur Mathelo நகர் கடை ஒன்றில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இரு இந்து இளைஞர்களை, வன்முறைக் கும்பல் ஒன்று சுட்டதில்  Dewan Sateesh Kumar என்ற 17 வயது இளைஞர் உயிரிழந்தார், இன்னொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து கண்டனத்தை வெளியிட்ட, பாகிஸ்தானின் கத்தோலிக்க அருள்பணியாளர் Abid Habib அவர்கள், பாகிஸ்தானின் மதநிந்தனைச் சட்டமே, மத தீவிரவாதத்திற்கு துணை நிற்பதாகத் தெரிவித்தார்.

மத நிந்தனை என்ற குற்றச்சாட்டின்பேரில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் எண்ணற்றோர் இன்னும் சிறைகளில் வாடுகின்றனர் என கவலையை வெளியிட்ட அருள்பணியாளர் Habib அவர்கள், குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள்கூட, இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, நாட்டிற்குள் வாழமுடியாத நிலை உள்ளது என்றார்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.