2016-08-02 16:18:00

இலங்கையில் காணாமல்போயுள்ளோரின் குடும்பங்களுக்கு உதவிகள் தேவை


ஆக.,02,2016. இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல்போன நபர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கு, பொருளாதார மற்றும் உளரீதியான உதவிகள் தேவைப்படுவதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

காணாமல்போன எண்ணற்ற மக்களுள் 16 ஆயிரம்பேர் குறித்து 395 குடும்பங்களிடையே ஆய்வுச் செய்த செஞ்சிலுவைச் சங்கம், அரசுக்கு அண்மையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், காணாமல் போனோரைக் கண்டுபிடிப்பதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படவேண்டிய உதவிகள் குறித்தும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் 65 ஆயிரம்பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், 2014ம் ஆண்டு அக்டோபர் முதல் 2015ம் ஆண்டு நவம்பர் வரை இலங்கையில் ஆய்வுச் செய்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், காணாமல்போயுள்ள 16,000 பேர் குறித்தே, விவரங்களைத் திரட்டியுள்ளது.

இதற்கிடையே, காணாமல்போயுள்ளோர் குறித்த புதிய அலுவலகம் ஒன்றை, இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனா அமைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.