2016-08-02 14:49:00

இது இரக்கத்தின் காலம் : துன்பமும், சாவும் சூழ்ந்த சிரியா


கடந்த வாரம், போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில், உலக இளையோர் நாள் நிகழ்வுகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் ஒன்றாக, ஜூலை 30ம் தேதி மாலை நடைபெற்ற திருவிழிப்பு திருவழிபாட்டில், மூன்று இளையோர் தங்கள் வாழ்வு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அவர்களில் ஒருவர், Rand Mittri என்ற இளம்பெண். இதோ, அவரது சாட்சியப் பகிர்வு:

என் பெயர் Rand Mittri. எனக்கு வயது 26. நான் சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து வருகிறேன். எங்கள் நகரம் எவ்வளவு தூரம் தகர்க்கப்பட்டு, பாழாகக் கிடக்கிறது என்பது உங்களுக்குத் ஓரளவு தெரியும் என்று நினைக்கிறேன். என் அன்புக்குரிய சிரியாவில் நடப்பனவற்றின் முழு தாக்கத்தையும் புரிந்துகொள்வது உங்களுக்குக் கடினமாக இருக்கும். அங்கு நடப்பதை ஒரு சில நிமிடங்களில் சொல்வது, எனக்கு கடினமாக உள்ளது. இருப்பினும், முயற்சி செய்கிறேன்.

ஒவ்வொரு நாளும், துன்பமும், சாவும் எங்களைச் சுற்றி வளைத்து, நெருக்குகின்றன. உங்களைப் போலவே, நாங்களும் ஒவ்வொரு நாளும் எங்கள் வீட்டுக் கதவுகளை மூடிவிட்டு, வேலைக்கோ, பள்ளிக்கோ செல்கிறோம். காலையில் வெளியே செல்லும் நாங்கள், மாலையில் வீடு திரும்புவோமா என்பது உறுதியில்லை. அப்படியே, நாங்கள் திரும்பி வந்தாலும், எங்கள் வீட்ட்டில் உள்ளவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பது உறுதியில்லை.

நான் அலெப்போவில் உள்ள தொன் போஸ்கொ மையத்தில் பணியாற்றுகிறேன். அந்த மையத்தில் 700 இளையோர் தங்கியிருக்கின்றனர். அவர்கள் தேடுவதெல்லாம், கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் மனிதாபிமானம். நம்பிக்கையையும், மகிழ்வையும், பெருமளவு இழந்துவிட்ட நான், மற்றவர்களுக்கு எப்படி அவற்றைக் கொடுக்க முடியும்?

இருப்பினும், எனக்கு நம்பிக்கை உண்டு. இத்தனை துன்பங்கள் நடுவிலும், இறைவன் உயிரோடிருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவர் மட்டுமே என் மகிழ்வுக்கும், நம்பிக்கைக்கும் அடித்தளம். இந்த மகிழ்வை யாராலும் என்னிடமிருந்து திருடிவிட முடியாது. என் அன்புக்குரிய சிரியாவுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

இளையோரின் சாட்சியப் பகிர்வுகளுக்குப் பின், திருத்தந்தை வழங்கிய உரையில், "வெறுப்பை வெறுப்பினாலும், வன்முறையை, வன்முறையாலும் வெல்வதற்கு நாம் விரும்பவில்லை. வெளி உலகிலும், உள் மனதிலும் நம்மைச் சூழ்ந்துள்ள போருக்கு நாம் தரும் ஒரே பதில், உடன்பிறந்த உணர்வு, குடும்பம் என்ற உணர்வு" என்று கூறினார். இரக்கத்தில் தோய்ந்த குடும்ப உணர்வை வளர்க்க, இரக்கத்தின் காலம் நமக்குச் சவால் விடுக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.