2016-08-01 16:50:00

வாரம் ஓர் அலசல் – பிறருக்குப் பயன்படத் தயாராக இருப்போம்


ஆக.01,2016. அன்பு நேயர்களே, ஹெல்மன் என்ற ஓவியர் வரைந்த, மெய்சிலிர்க்க வைக்கும் ஓர் ஓவியம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதில் கடவுள், மூடியிருக்கும் கதவைத் தட்டிக்கொண்டிருப்பது போன்று வரையப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவர்கள் எல்லாரும், தத்ரூபமான ஓவியம் என்று சொல்லி பரவசம் அடைந்தனர். ஆனால், ஒரே ஒருவர் மட்டும், ஓவியத்தின் கதவில் சாவித்துவாரம் இல்லையே, சாவி இல்லாமல் கதவை எப்படித் திறப்பது? அதனால் இந்த ஓவியத்தில் குறை உள்ளது என்று சுட்டிக்காட்டினார். அந்த நபரிடம் ஹெல்மன், தாழ்ப்பாள் உள்ளே இருக்கிறது, உள்ளே இருக்கும் நாம்தான் கடவுள் வரும் நேரத்தை உணர்ந்து திறக்க வேண்டும். தரிசனம் கதவைத்தான் தட்டும், தேவைப்பட்டவர்தாம் அதைக் கெட்டியாகப் பிடித்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பதில் சொன்னார். அன்பர்களே, இந்நிகழ்வு, எப்போதும் எதற்கும் தயாராக இரு என்பதை அழுத்திச் சொல்கிறது. எப்போதும் பிறருக்குப் பயன்படத் தயாராக இருப்பதுதான் மனிதத்தின் அடிப்படைக் கூறு.

அது ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பம். தென்னிந்தியாவில் வாழ்ந்து வரும் அக்குடும்பத்தில், கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் பாட்டி. அந்த வீட்டில் கணவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன. யாராவது தானம் கொடுத்தால்தான் அவர் வாழ முடியும் என்ற நிலை. அப்போது அவரது மனைவி முன்வந்தார். அவரது சிறுநீரகமும், கணவருக்குப் பொருந்துவதாய் இருந்தது. மருத்துவரிடம் பரிசோதனைக்குச் சென்றபோது, தானம் கொடுக்கும் அந்தக் குடும்பத் தலைவி தனது எடையை பத்து கிலோ குறைத்திருக்க வேண்டும், அதுவும் இரண்டு மாதத்தில் என்று கூறப்பட்டது. அதனால் அவர் தீவிர உடல் பயிற்சி செய்ய ஆரம்பித்தார். இந்த உடல் பயிற்சியை அவர் ஏன் செய்கிறார் என்று பிள்ளைகளுக்குத் தெரியாது. தெரிந்தால் கவலைப்படுவார்கள் என்று அதை அவர்களிடம் சொல்லவில்லை. அப்பயிற்சியைச் செய்யும்போது அவர் கீழே தவறி விழுந்தார். அம்மாவின் புதிய செயல் கண்டு பிள்ளைகள் கேலி செய்து சிரித்தார்கள். ஆனாலும் அவர் விடவில்லை. மழையிலும்கூட ஓட்டப் பயிற்சி. வெறும் பச்சை காய்கறிகளே உணவு... இப்படி கடுமையாகப் பயிற்சி செய்து இரு மாதங்களுக்குள் பத்துக் கிலோவைக் குறைத்துவிட்டார். அன்று, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அறுவைச் சிகிச்சை நடந்தது. அன்று பள்ளி முடிந்து வந்த பிள்ளைகள் அம்மாவைத் தேடினர். அப்போது பாட்டி நடந்ததைச் சொன்னார். பிள்ளைகள் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடினர். படுக்கையில் இருந்த அப்பாவைப் பார்த்தனர். சக்கர வண்டியில் அங்கு வந்த அம்மாவையும் பார்த்துக் கண் கலங்கினர். மருத்துவர் பிள்ளைகளைத் தேற்றினார். எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. அப்பாவும் அம்மாவும் விரைவில் முழு குணம் பெற்றுவிடுவார்கள் என்றார்.

அன்புள்ளங்களே, வாழ்ந்தால் பிறருக்கு உதவக்கூடிய முறையில் வாழ வேண்டும். அதுதான் உண்மையான மனிதருக்கு அழகு. ஒருமுறை தலைவர் காமராசர் அவர்களிடம்,  தங்களைச் சிலையாகச் செய்து, சிறப்பு செய்ய விரும்புகின்றோம் என்று அவரின் நண்பர்கள் சொன்னார்கள். சரி, சிலைக்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டார் காமராசர். அதற்கு அவர்கள், பத்தாயிரம் ரூபாய் ஆகும் என்றனர். ரொம்ப நல்லதாப்போச்சு, அதைக் கொடுங்கள், குழந்தைகள் படிப்பிற்குப் பணம் தேவைப்படுகிறது என்றாராம் கர்மவீரர் காமராசர். மனிதத்தைப் பதிவு செய்த நிகரற்ற தலைவர் என்று, இதனால்தான் இவர் போற்றப்படுகிறார். பிறருக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர் இவர். 

சென்னை மெரீனா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, சர்வீஸ் சாலையில், அமுதா  என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை 17ம் தேதி, ஞாயிறன்று அவரது டீக்கடை அருகே பை ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்த அமுதா உள்ளே திறந்து பார்த்துள்ளார். பையினுள் தங்க நகைகள், கைபேசி மற்றும் பணம் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா, அது குறித்து தனது கணவர் திருமலையிடம் தெரிவித்துள்ளார். தவறவிட்ட பையைத் தேடி யாராவது வருகிறார்களா என சிறிது நேரம் இருவரும் காத்திருந்துள்ளனர். ஆனால் யாரும் வரவில்லை. இதையடுத்து காவல்துறை அதிகாரி ராஜாராமைத் தொடர்பு கொண்ட திருமலை, பை குறித்து தகவல் அளித்துள்ளார். அந்தப் பையை, அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அவர் அறிவுரை வழங்கியதன்பேரில் தம்பதியர், அந்தப் பையை உடனடியாக அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்குக் கொண்டுபோய் ஒப்படைத்தனர். இந்தக் காலத்தில் இப்படி ஒரு அரிய குணமா என்று அங்கிருந்த காவல்துறையினர், அத்தம்பதியரின் நேர்மையைப் பாராட்டினர். சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் ராஜேந்திரன் அவர்கள், அத்தம்பதியரை நேரில் அழைத்துக் கௌரவித்துள்ளார். அன்பர்களே, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், பொருளைத் தொலைத்தவரின் உணர்வுகளைப் புரிந்து செயல்பட்ட மனிதமிக்கத் தம்பதியர் இவர்கள்.

வாழ்வில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்று புரியாதிருந்த தனது மனைவியை ஆற்றங்கரைக்கு அழைத்துப் போனார் அவர். தனது மனைவியிடம் ஒரு பையைக் கொடுத்து, அங்கு கிடந்த பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார். இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு என்றார் மனைவியிடம். மனைவியும் பையை நிரப்பி விட்டு இதற்குமேல் முடியாது என்றார். பின்னர், கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்து அதே பையில் போட்டுக் குலுக்கினார். அவை, பெரிய கற்களுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின. ஒரு கட்டத்தில் மேற்கொண்டு போட முடியவில்லை. இப்போதாவது நிரம்பி விட்டதாக ஒப்புக்கொள்வீர்களா? என்று கேட்டார் அவர் மனைவி. ஆனால், கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டு, பையைக் குலுக்கினார். பெரிய கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது. பின்னர் கணவர், தனது மனைவியிடம், இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா என்று கேட்டார். இருந்திருக்காது என்று ஒப்புக்கொண்டார் மனைவி. பின்னர் வாழ்க்கைப் பாடத்தையும் விளக்கினார் கணவர். அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற, வாழ்வை மேம்படுத்தக்கூடிய உன்னதமான விடயங்கள்தான் பெரிய கற்கள் போன்றவை. வேலை, வீடு, கார், போன்ற செல்வங்கள், கூழாங்கற்களுக்குச் சமமானவை. பகட்டு, கேளிக்கை, வீண்அரட்டை போன்ற அற்ப விடயங்கள் இந்த மணல் போன்றவை. அதனால் முதலில் பெரிய விடயங்களுக்கு வாழ்வில் முதலிடம் கொடு. அதன்பின்னும், சின்னச் சின்ன விடயங்களுக்கும் இடம் இருக்கும். ஆனால், அற்ப விடயங்களுக்காக வாழ்வை முதலில் செலவழித்துவிட்டால், முக்கியமான விடயங்களுக்கு இடம் இருக்காது. அதனால் வாழ்வில் உயரிய, நல்ல விடயங்களுக்கும், செயல்களுக்குமே முக்கியத்துவம் தர வேண்டும். அப்போது தேவையற்ற விடயங்கள், மணல்போன்று தானாக கீழே இறங்கி உதிர்ந்துவிடும். இது வாட்ஸப்பில், நல்ல உறவுகள் பகிர்ந்துகொண்ட செய்தி.

ஓர் ஏழை மனிதர் புத்தரிடம் சென்று, நான் ஏன் ஏழையாயிருக்கிறேன்? என்று கேட்டார். அதற்கு புத்தர், நீ கொடுப்பதில்லை மற்றும் எப்படிக் கொடுப்பது என்றும் உனக்குத் தெரியவில்லை என்றார். அதற்கு அந்த ஏழை, என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்றார். அதற்கு புத்தர், உன்னிடம் கொடுப்பதற்கு பொருள்கள் உள்ளன, அவை மதிப்புக் குறைந்தவையும் அல்ல என்றார். புன்சிரிப்பையும், மகிழ்வையும் வெளிப்படுத்துவதற்கு உனக்கு முகம் உள்ளது. கனிவான சொற்களைப் பேசுவதற்கும், மக்களை ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களை மகிழ்வாக வைப்பதற்கும் தேற்றுவதற்கும் வாய் உள்ளது. நேர்மை, உண்மை மற்றும் இரக்கத்தால் பிறருக்கு உன்னைத் திறப்பதற்கு இதயம் உள்ளது. பிறரைக் கனிவோடும், பரிவிரக்கத்தோடும் நோக்குவதற்கு கண்கள் உள்ளன. உனது வேலையைப் பயன்படுத்தி பிறருக்கு உதவுவதற்கு உனது உடல் உள்ளது. பார்த்தாயா, நீ ஏழை இல்லை. இதயத்தில் ஏழைகளாய் இருப்பவர்களே உண்மையான ஏழைகள் என்றார் புத்தர். 

அன்பர்களே, நம் ஒவ்வொருவருக்கும் இருப்பது கையளவு இதயம். ஆனால் அது ஆற்றும் செயல்களுக்கு வரம்பே இல்லை. ஒரு தோப்பில் அருகருகே வளர்ந்த தேக்கு, மா ஆகிய இரண்டு மரங்களும் இவ்வாறு பேசிக்கொண்டனவாம். நான் வளர்ந்து வெட்டப்பட்டதும் திடமான சாமான்களாக உருவாகிறேன். என் விலையோ, மதிப்போ அதிகம். பயனும் அதிகம். ஆனாலும் மக்கள் உன்னையே போற்றுகின்றார்கள் என்றது தேக்கு. அதற்கு, மாமரம், நான் வாழ்கின்றபோதே வழங்குகிறேன். நீ வீழ்கின்றபோது மட்டுமே விநியோகிக்கின்றாய் என்றது. அன்பு இதயங்களே, நாமும் மாமரத்தைப் போன்று வாழ்கின்றபோதே பிறருக்குப் பயன்படத் தயாராகுவோம். அதுவே வாழ்வின் அரத்தமுமாகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.