2016-08-01 17:04:00

கொல்லப்பட்ட அருள்பணியாள‌ர் நினைவு வழிபாட்டில் முஸ்லீம்கள்


ஆக.01,2016. பிரான்சில், இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொலைசெய்யப்பட்ட உள்ளூர் அருள்பணியாளர் Jacques Hamel அவர்களின் நினைவாக Rouen பேராலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில், கத்தோலிக்க விசுவாசிகளுடன் நூற்றுக்கும் அதிகமான முஸ்லீம்களும் பங்கேற்றுள்ளனர்.

இத்தகையக் கொடூரத் தாக்குதலை முஸ்லீம்கள் ஏற்கவில்லை என்பதைக் காட்டும் வகையில், இந்த வழிபாட்டில் பங்கேற்க வருமாறு, முஸ்லீம்களுக்குத் தலத்திருஅவை ஏற்கனவே  அழைப்பு விடுத்திருந்ததையொட்டி, பெருமளவில் இஸ்லாமியர்களும் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டனர்.

85 வயதுநிறைந்த அருள்பணியாளர் Jacques Hamel அவர்கள், தன்னுடைய பங்குதள ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, இரு இஸ்லாமிய தீவிரவாதிகளால் கழுத்து அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரைக்கொன்றவர்களும் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தாலி நாட்டில், உரோம், பிளாரன்ஸ், மிலான், நேப்பிள்ஸ் உட்பட பல நகரங்களில் கத்தோலிக்க ஆலயங்களில், அருள்பணியாளர் Jacques Hamel அவர்களின் பெயரால் இஞ்ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட நினைவு வழிபாடுகளில், 23,000த்திற்கும் அதிகமான முஸ்லீம்கள் கலந்துகொண்டனர் என்று, இத்தாலிய நாளிதழ், la Repubblica கூறியுள்ளது.

ஆதாரம் : BBC/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.