2016-08-01 16:40:00

அரைகுறை அர்ப்பணிப்பில் மிஞ்சுவது துன்பம்தான்


ஒருசமயம், பணக்காரர் ஒருவர், ஆயிரம் பொற்காசுகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டுவந்து, இராமகிருஷ்ணரின் காலடியில் வைத்து அவரை வீழ்ந்து வணங்கினார். அடியேனின் இந்த எளிய காணிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார் அவர். எளிய மலரையும், சில்லறைக் காசுகளையும் ஏற்பதுதான் பகவானுடைய கடமை. அப்படியிருக்க, நீ பொற்காசுகளை, அதுவும் ஆயிரம் பொற்காசுகளைக் கொண்டு வந்திருக்கிறாய். எப்படி மறுக்க முடியும்? என்று சிரித்தார் இராமகிருஷ்ணர். தனது பரிசளிப்பைப் பலரும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பையைப் பிரித்து, பொற்காசுகளைத் தரையில் கலகலவெனக் கொட்டினார் பணக்காரர். உடனே இராமகிருஷ்ணர், நீ செய்யும் தானத்தை ஏன் இவ்வளவு சத்தத்தோடு செய்கிறாய் என, காதைப் பொத்திக் கொண்டார். அது சரி, இப்போது இவை யாருடையவை என்றார் இராமகிருஷ்ணர். பகவானே, இவை உம்முடையவை என்றார் பணக்காரர். அப்படியானால் இவற்றை நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால், இந்த மூட்டையைக் கங்கையில் வீசிவிட்டு வந்து என்னைப் பார் என்றார் இராமகிருஷ்ணர். தன்னைப் பெருமைப்படுத்தி புகழ்வார் என்று நினைத்திருந்த பணக்காரரின் மனதில் இடி விழுந்தது. எனினும், வேறு வழியின்றி, கட்டளையை மீற முடியாமல் சோகமாகப் புறப்பட்டார். சிலமணி நேரம் ஆனது. அவர் திரும்பவே இல்லை. பணக்காரர் கங்கைக் கரையில் உட்கார்ந்து, பெருமூச்சு விட்டபடி, ஒவ்வொரு பொற்காசாக எடுத்து, அதைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, படிக்கட்டில் தட்டித் தட்டி, வெகு கவலையோடு எறிந்து கொண்டிருந்தார். அவரைத் தேடிச் சென்ற இராமகிருஷ்ணர், மகனே, கங்கையில் பொற்காசு மூட்டையை வீசிவிட்டு வா என்றுதானே சொன்னேன். உண்மையாகவே இதை நீ என்னிடம் அர்ப்பணித்திருந்தால், இந்தப் பொருளை எறியும்போது நீ பாதிக்கப்பட்டிருக்கமாட்டாய். அர்ப்பணிப்பு அரைகுறையாக இருந்தால் துன்பம்தான் மிஞ்சும் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.