2016-07-31 16:47:00

கிரக்கோவில் திட்டமிடப்படாத இரு நிகழ்வுகளில் திருத்தந்தை


ஜூலை,31,2016. ஜூலை 30, சனிக்கிழமை மதியம், கிரக்கோவ் பேராயர் இல்லத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 இளையோருடன் மதிய உணவருந்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிற்பகலில், இப்பயணத்தில் திட்டமிடப்படாத இரு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

முதல் நிகழ்வாக, போலந்து நாட்டில் பணியாற்றும் இயேசு சபை துறவியர் 30 பேரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேராயர் இல்லத்தில் சந்தித்தார். 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், கேள்வி பதில்கள் பரிமாற்றம் இடம் பெற்றன. இயேசு சபையினரின் ஒரு தனிப்பட்ட பண்பான தேர்ந்து தெளிதல் பற்றி திருத்தந்தை பேசினார். வந்திருந்த 30 பேரில், அண்மையில் அருள் பணியாளர்களாக திருநிலைப் பெற்ற இளையோர் உட்பட, அதிகம் பேர் இளையோராய் இருந்தது கண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இளையோர் கொணரும் புத்துணர்வு, தனக்கு மகிழ்வைத் தருவதாகக் குறிப்பிட்டார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் அனைத்து நாடுகளிலும் இயேசு சபையினரைச் சந்திப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நிகழ்வாக, பேராயர் இல்லத்திற்கு எதிரே அமைந்திருந்த அசிசி நகர் புனித பிரான்சிஸ் பேராலயம் சென்றார், திருத்தந்தை. 1991ம் ஆண்டு பெரு நாட்டில் Shining Path எனப்படும் கொரில்லா குழுவால் கொல்லப்பட்ட அருளாளர்கள் Michal Tomaszek மற்றும் Zhigniew Strzalkowski என்ற இரு போலந்து அருள் பணியாளர்களின் புனிதப் பொருள்களை முத்தி செய்து செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு அருளாளர்களின் சகோதர, சகோதரிகளையும் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.