2016-07-31 16:53:00

இரக்கத்தின் வளாகத்தில் இளையோரின் திருவிழிப்பு வழிபாடு


ஜூலை,31,2016. சனிக்கிழமை மாலை 7 மணிக்கு, திருத்தந்தையின் வாகனம், கிரக்கோவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இரக்கத்தின் வளாகத்தை அடைந்தபோது, அங்கு 16 இலட்சம் இளையோர் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். ஒருமுறை அந்த வளாகத்தை வாகனத்தில் வலம்வந்தத் திருத்தந்தை, பின்னர், இளையோர் பிரதிநிதிகள் ஆறுபேருடன், அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புனித வாசல் வழியே நுழைந்தார். இதைத் தொடர்ந்து, உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் ஒரு முக்கிய நிகழ்வான, திருவிழிப்பு வழிபாடு துவங்கியது.

3 பகுதிகளாக அமைந்திருந்த இந்த வழிபாட்டின் முதல் பகுதியில், போலந்து நாட்டைச் சேர்ந்த Natalia Wrzesien, சிரியாவின் அலெப்போ நகரைச் சேர்ந்த Rand Mittri ஆகிய இரு இளம் பெண்களும், பராகுவே நாட்டின் Miguel என்ற இளைஞரும் தங்கள் வாழ்வின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இன்றைய உலகில், ஆன்மீக வழியைக் கண்டுகொள்ள இயலும் என்றும், வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்றும், போதைப் பொருள் போன்ற தீமையையும், மன்னிப்பினால் வெல்லமுடியும் என்றும் இப்பகிர்வுகளில் சொல்லப்பட்டன. இதே கருத்துக்களை மையப்படுத்தி, குறு நாடகங்களும் இடம்பெற்றன. இவற்றைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை வழங்கினார்.

திருத்தந்தையின் உரையைத் தொடர்ந்து, நற்கருணை ஆராதனையும், ஆசீரும் இடம்பெற்றன. ஏறத்தாழ 90 நிமிடங்கள் நீடித்த இந்த திருவிழிப்பு வழிபாட்டை முடித்து, திருத்தந்தை மீண்டும் பேராயர் இல்லம் திரும்பினார். இரக்கத்தின் வளாகத்தில் கூடியிருந்த இளையோருக்கு, இறை இரக்கத்தை மையப்படுத்தி, பல்வேறு கிறிஸ்தவ இசைக் குழுவினர் பாடல்களை வழங்கினர். இந்தியாவின் Rex Band என்ற இசைக்குழுவும் பாடல்களை வழங்கியது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.