2016-07-28 16:04:00

யஸ்ன கோரா (Jasna Góra) திருத்தலத்தில் திருத்தந்தை மறையுரை


ஜூலை,28,2016 அன்பு சகோதர, சகோதரிகளே, இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள், மனித வரலாறு, மீட்பின் வரலாறு ஆகியவற்றை இணைத்துச் செல்லும் ஒரு கயிறாக விளங்குகின்றன.

"காலம் நிறைவேறியபோது, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்" (கலாத்தியர் 4:4) என்ற சொற்கள் வழியே, இறைவனின் மாபெரும் திட்டத்தை, திருத்தூதர் பவுல் நமக்கு எடுத்துரைக்கிறார். ஆயினும், 'நிறைவுபெற்ற காலத்தில்' இறைவன் மனிதராக வந்தபோது, மனித சமுதாயம் அவரை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இல்லை. "அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவான் 1:11)

இறைவன் மனித வரலாற்றில் எவ்விதம் நுழைந்தார் என்பது கவனிக்கத்தக்கது. 'பெண்ணிடம் பிறந்தவராக' இறைவன் வந்தார்; அவரது வருகை, ஆடம்பரமான, வெற்றிகரமான வருகை அல்ல. விவிலியம் கூறுவது போல், நிலத்தை நனைக்கும் மழைத்துளி போல் (எசாயா 55:10), மண்ணில் விழுந்து, முளைத்து வரும் விதையைப் போல் (மாற்கு 4:31-32) இறைவன் மனித வரலாற்றில் நுழைந்தார். இன்றும், இறைவனின் அரசு, மிக எளிய, பணிவான வழிகளில், யாருடைய கவனத்தையும் ஈர்க்காத வழிகளில் (லூக்கா 17:20) வருகிறது.

இவ்விதம் அமைதியாக இவ்வுலகிற்கு வந்த இயேசு, கலிலேயாவில், கானாவில் ஆற்றிய முதல் புதுமை (யோவான் 2:11) இன்றைய நற்செய்தியாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அடையாளம், மக்கள் கூட்டத்திற்கு முன் செய்யப்பட்ட பிரம்மாண்டமான அடையாளம் அல்ல. ஒரு சிறிய கிராமத்தில், ஊர் பேர் தெரியாத ஒரு குடும்பத்தில் நடந்த திருமணத்தில், அங்குள்ளோரை மகிழ்விக்க செய்யப்பட்ட புதுமையாக அமைந்தது.

அதேவேளையில், தண்ணீர், திராட்சை இரசமாக மாறிய அடையாளம், இறைவன் நமக்கு மிக அருகில் உள்ளார் என்பதையும் தெளிவாக்குகிறது.

இறைவன், நம்மைப் போல் பகட்டையும் பிரம்மாண்டத்தையும் விரும்பாமல், சிறிய, எளிய வடிவங்களில் நம்மிடையே தங்க விழைகிறார். ஆடம்பரத்தினால் ஈர்க்கப்பெறுவது மனிதத் தன்மை. ஆயினும், தூரங்களைக் குறைத்து, எளிய வழிகளில் அடுத்தவருக்காக தம்மையே அளிப்பது, இறைத்தன்மை.

இறைவன் தன்னையே சிறுமைப்படுத்துகிறார். அவர் கனிவும் மனத்தாழ்மையும் உடையவர் (மத்தேயு 11:29). அவரது அரசு, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தப்படுகிறது (மத். 11:25) போலந்து நாட்டு மக்களில் பலருக்கு இந்த அரசு வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள் தங்கள் இரத்தத்தால் இந்த அரசிற்கு சான்று பகர்ந்தனர். இறை இரக்கத்தின் வாய்க்கால்களாக விளங்கிய புனித 2ம் ஜான்பால், மற்றும் புனித பவுஸ்தீனா இருவரையும் எண்ணிப் பார்க்கிறோம்.

மேலும், இறைவன் நம் அருகில் இருக்கிறார், அவரது அரசு நெருங்கி வந்துவிட்டது (மாற்கு 1:15). இறைவன், வானகத்தில் அமைந்துள்ள ஒரு அரியணையிலோ, வரலாற்று நூல்களின் பக்கங்களிலோ அமர்ந்திருக்க விரும்பவில்லை, மாறாக, நமது ஒவ்வொரு நாள் வாழ்விலும் நுழைந்து, நம்மோடு நடக்க விழைகிறார். அவர் உங்கள் வாழ்வின் பல சூழல்களில் உடன் நடந்துள்ளார். இதையே அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். அயலவர் போராட்டங்களில் நம்மையே ஈடுபடுத்தி, அதன் வழியே நற்செய்தியைப் பரப்புவதையே இறைவன் விரும்புகிறார்.

இறுதியாக, இறைவன் மாயை அல்ல, நிஜமானவர். மனிதர்களின் வரலாற்றில் தன்னையே இணைத்துக் கொண்ட உண்மை, அவர். அவர் மீது நம்பிக்கை கொண்டதால், நற்செய்திக்கு பிரமாணிக்கமாக இருந்ததால், உங்கள் வரலாற்றில் நிகழ்ந்த மாற்றங்களை உலகறியும். உங்கள் நம்பிக்கை, தலைமுறை, தலைமுறையாய் தொடர்ந்து வந்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, அன்னை மரியாவின் பராமரிப்பை நீங்கள் அற்புதமாக உணர்ந்துள்ளீர்கள்.

அன்னை மரியா வழியே, இறைவன் தன் முழு பிரதிபலிப்பை வெளிப்படுத்த விரும்பினார். இறைவன் நம்மிடையே இறங்கிவர, அந்த அன்னை ஓர் ஏணிப்படியாக இருந்தார். அவரது தாழ்நிலையைக் கண்டு, இறைவன் நம்மில் ஒருவராக வருவதற்கு இணங்கினார்.

கானாவில் செய்தது போல, இங்கு யஸ்ன கோராவிலும் (Jasna Góra) இறைவனின் அருகாமையை நமக்கு உணர்த்த வருகிறார், அன்னை மரியா.

நடைமுறை வாழ்வில் எழும் பிரச்சனைகளை திறமையாக, அதே வேளையில், எளிமையாக தீர்த்து வைக்கத் தெரிந்தவர், அன்னை மரியா. அவரது பரிந்துரையால், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் காலம் நிறைவுறட்டும். எளிமையிலும், சிறு, சிறு விடயங்களிலும் நாம் அயலவருடன் பயணிக்க, திறந்த மனதுடன் முன்வருவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.