2016-07-28 15:36:00

Wavel மாளிகையில் அரசு வரவேற்பு நிகழ்ச்சி


ஜூலை,28,2016. Warsaw நகர், போலந்து நாட்டின் தலைநகராக அறிவிக்கப்படும் வரை, அதாவது, 1038ம் ஆண்டு முதல், 1596ம் ஆண்டு வரை, கிரக்கோவ் நகரே, போலந்தின் தலைநகராகவும், அதன் அருகில் உள்ள Wavel மாளிகையே, ஆட்சியாளர்களின் தங்குமிடமாகவும் அமைந்திருந்தன. இந்த Wavel நகரின் வாயில் வரை மூடியக் காரில் பயணித்தத் திருத்தந்தை, அங்கிருந்து, குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தப்பட்ட திறந்த காரில் Wavel மாளிகை நோக்கிச் சென்றார்.

16 கி.மீ. தூரமுடைய இந்தப் பாதையின் இருபுறமும் மக்கள் கூட்டம், அதிலும் குறிப்பாக இளையோர் கூட்டம் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தது. உள்ளூர் நேரம் ஏறத்தாழ 5 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் 8.30 மணிக்கு, Wavel மாளிகையை அடைந்த திருத்தந்தையை, அரசு அதிகாரிகள், சமுதாயத் தலைவர்கள், பன்னாட்டுத் தூதர்கள் என ஏறத்தாழ 800 பேர் குழுமியிருந்து வரவேற்றனர்.

திருத்தந்தையை முதலில் வரவேற்றுப் பேசிய அரசுத்தலைவர் Duda அவர்கள், இளையோருக்கு திருத்தந்தை வழங்கிவரும் ஆன்மீக வழிகாட்டுதலுக்கும், ஆதரவுக்கும் நன்றி கூறினார். புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் பயின்று, பணியாற்றிவந்த கிரக்கோவ் நகரில், உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படுவது குறித்த மகிழ்ச்சியையும் அரசுத் தலைவர் வெளியிட்டார். கிறிஸ்தவ மதத்திலிருந்து வழிந்தோடும் மகிழ்வு, நம்பிக்கை மற்றும் அன்பு ஆகியவற்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம், இன்றைய இளையோர் காண்பதாகவும் அரசுத் தலைவர் Duda அவர்கள் தன் வரவேற்புரையில் கூறினார். அரசுத் தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போலந்து நாட்டு அதிகாரிகளுக்கு உரை வழங்கினார்.

இந்த வரவேற்பு நிகழ்வுக்குப் பின், Wavel மாளிகையின் இரண்டாவது தளத்தில், அரசுத் தலைவருக்கும், திருத்தந்தைக்கும் இடையே தனிப்பட்ட சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது, இத்திருப்பயணத்தின் சிறப்பு நினைவாக வத்திக்கானில் உருவாக்கப்பட்டிருந்த பதக்கம் ஒன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அரசுத் தலைவருக்கு வழங்கினார். கலைஞர் Daniela Longo என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பதக்கத்தில், உலக இளையோர் நாளுக்கென உருவாக்கப்பட்டிருந்த இலச்சினையும், Czestochowa மரியன்னையின் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.