2016-07-27 14:24:00

திருத்தந்தையின் போலந்து திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது


ஜூலை,27,2016. புனிதத் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் பிறந்த போலந்து நாட்டிற்கு, தனது 15வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, இப்புதன், உரோம் நேரம் பிற்பகல் இரண்டு மணிக்குத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு காரில் சென்று, அங்கு தன்னை வழியனுப்ப வந்திருந்த இத்தாலிய, அரசு மற்றும் திருஅவை அதிகாரிகள் என, எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லி, ஆல் இத்தாலியா A321 விமானத்தில் போலந்து நாட்டின் கிரக்கோவ் நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை. இந்த விமானப் பயணத்தில், தன்னோடு பயணம் செய்த பத்திரிகையாளர்களையும் வாழ்த்தினார். வழியில் கடந்துசெல்லும், இத்தாலி, குரோவேஷியா, சுலோவேனியா, ஆஸ்ட்ரியா, சுலோவாக்கியா மற்றும் போலந்து நாடுகளின் தலைவர்களுக்கு வாழ்த்தும், ஆசீரும், செபமும் கலந்த தந்திச் செய்திகளையும் அனுப்பினார் திருத்தந்தை. இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின்னர், போலந்து நாட்டின் கிரக்கோவ் நகர், புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் பன்னாட்டு விமான நிலையத்தை திருத்தந்தை அடைந்தபோது உள்ளூர் நேரம் மாலை 4 மணியாகும். அப்போது இந்திய நேரம் புதன் இரவு 7.30 மணியாகும். 1968ம் ஆண்டு வரை, இராணுவத் தளமாக இருந்த இவ்விடம், நவீனமயமாக்கப்பட்டு, 1995ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் பன்னாட்டு விமான நிலையம் எனப் பெயரிடப்பட்டது. இப்புனித திருத்தந்தை, 1963ம் ஆண்டு முதல், அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1978ம் ஆண்டு வரை, கிரக்கோவ் பேராயராகப் பணியாற்றினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது வாழ்நாளில் முதல் முறையாக இப்போதுதான் போலந்து சென்றுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.

கிரக்கோவ், சென்றடைந்த திருத்தந்தையை, போலந்து அரசுத்தலைவர் Andrzej Duda தனது துணைவியாருடன் சென்று வரவேற்றார். அங்கு திருத்தந்தைக்கு அரச வரவேற்பளிக்கப்பட்டது. இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள வாவெல்(Wawel)க்குத் திறந்த காரில் செல்வது, அங்கு அரசுத்தலைவர் மாளிகையில், அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் சமுதாயத் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றுவது, அம்மாளிகையில் மரியாதை நிமித்தம் அரசுத்தலைவரைச் சந்திப்பது, பின்னர் கிரக்கோவ் பேராலயத்தில் போலந்து ஆயர்களைச் சந்திப்பது இந்த முதல் நாள் பயணத் திட்டத்தில் இருந்தன. ஆயர்கள் சந்திப்பின்போது ஊடகத்துறையினர் உட்பட, வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், விஸ்துலா நதிக்கரையில் அமைந்துள்ள வாவெல் நகரம், அரசு மாளிகை, புனிதர்கள் ஸ்தனிஸ்லாவ், வாக்லாவ் பேராலயம், இன்னும், பழமையான கட்டடங்களுக்கும் பெயர்பெற்றது. இருபதாம் நூற்றாண்டில் அரசுத்தலைவர் வாழும் இடமாகவும் இது இருக்கின்றது.

31வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதே, திருத்தந்தையின் போலந்து நாட்டுக்கான இந்த ஐந்து நாள் திருத்தூதுப் பயணத்தின் நோக்கமாகும். "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" (மத்.5:7) என்ற மையக் கருத்துடன் இந்நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த உலக இளையோர் நாளை, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், 1985ம் ஆண்டில் உருவாக்கினார். அதனை, 1986ம் ஆண்டில் முதல் முறையாகச் சிறப்பிக்க உலக ஆயர்களுக்கு அழைப்பு விடுத்த இத்திருத்தந்தை, ஒவ்வோர் ஆண்டும் குருத்தோலை ஞாயிறன்று இதனைச் சிறப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதன்படி, ஆண்டுதோறும் மறைமாவட்ட அளவிலும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, பல்வேறு நாடுகளிலும் இத்தினம் கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார். 1987ல் அர்ஜென்டீனா நாட்டு புவனோஸ் ஐரெஸிலும், 1989ல் இஸ்பெயின் நாட்டின் சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லாவிலும், 1991ல் போலந்தின், செஸ்டகோவாவிலும், 1993ல் அமெரிக்க ஐக்கிய நாட்டு டென்வரிலும், 1995ல், பிலிப்பைன்சின் மனிலாவிலும், 2000மாம் ஆண்டில் உரோமையிலும், 2002ல் கனடாவின் டொரொன்டோவிலும், 2005ல் ஜெர்மனியின் கொலோனிலும், 2008ல், ஆஸ்திரேலியாவின் சிட்னியிலும், 2011ல் இஸ்பெயினின் மத்ரித்திலும், 2013ல், பிரேசிலின் ரியோ தெ ஜெனெய்ரோவிலும் இந்த உலக தினங்கள் நடைபெற்றுள்ளன. 2016ல், மீண்டும், போலந்தில், அதுவும், இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இறை இரக்கம் என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்ட கிரக்கோவ் நகரில் இந்த உலக இளையோர் தினம் சிறப்பிக்கப்படுகின்றது. இறைவனின் இரக்கத்தை அடிக்கடி சொல்லிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரக்கோவ் நகரில் இத்தினத்தைச் சிறப்பிப்பது எவ்வளவு பொருத்தமாக அமைந்துள்ளது. 187 நாடுகளிலிருந்து 15 இலட்சம் முதல் 18 இலட்சம் வரை இளையோரும், 800 ஆயர்கள் மற்றும் 70 கர்தினால்கள், இதில் கலந்து கொள்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  2ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின், ஆயர்களும், கர்தினால்களும் இத்தகைய எண்ணிக்கையில் கூடுவது இதுவே முதல் முறை எனவும் சொல்லப்பட்டுள்ளது.

மத்திய ஐரோப்பாவில், வடக்கே பால்டிக் கடலுக்கும், தெற்கே, சுடேட்டன், கர்பாத்தியன் ஆகிய இரு மலைத்தொடர்களுக்கும் இடையில் அமைந்துள்ள நாடு போலந்து. மேலும், ஜெர்மனி, செக் குடியரசு, சுலோவாக்கியா, உக்ரைன், பெலாருஸ், லித்துவேனியா போன்ற நாடுகளையும் இது எல்லைகளாகக் கொண்டுள்ளது. இந்நாடு, உலகில், 69வது பெரிய நாடாகவும், ஐரோப்பாவில் 9வது பெரிய நாடாகவும் உள்ளது. மக்கள்தொகையில், உலகில் 34வது இடத்திலும், ஐரோப்பாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள 8வது நாடாகவும் இது உள்ளது. போலந்து நாடு கி.பி.966ம் ஆண்டில் உருவானது. அப்போது அந்நாடு கிறிஸ்தவத்திற்கு மாறியது. பின் இந்நாடு, புருசியா, இரஷ்யா, ஆஸ்ட்ரியா ஆகிய பேரரசுகளுக்கு இடையே துண்டாடப்பட்டு, 1918ம் ஆண்டில் முதல் உலகப்போர் முடிந்தபோது சுதந்திரம் அடைந்தது. நாத்சி ஜெர்மனி போலந்தை ஆக்ரமித்ததோடு, 1939ம் ஆண்டு செப்டம்பரில், இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. போரில், அறுபது இலட்சத்திற்கு மேற்பட்ட போலந்து குடிமக்கள் இறந்தனர். 1947ம் ஆண்டில் போலந்து சோவியத் யூனியனில் இணைக்கப்பட்டது. 1989ம் ஆண்டின் புரட்சிகளில் போலந்தின் கம்யூனிச அரசு கவிழ்க்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரில், போலந்து பெரும் அழிவுகளைச் சந்தித்திருந்தாலும், அதன் பெருமளவான கலாச்சார வளங்கள் பாதுகாக்கப்பட்டன. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவிடங்களில் 14,  இந்நாட்டில் உள்ளன. 54 வரலாற்று நினைவு அடையாளங்களும் உள்ள இந்நாடு, உலகில் மிகப் பாதுகாப்பாக வாழ்வதற்குரிய நாடுகளில் ஒன்றாக, 2014ல் உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இடம்பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ, ஒரு கோடியே 60 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்நாடு செல்கின்றனர்.

323,250 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட போலந்து நாட்டின் மக்கள் தொகை, 37,507,000. இவர்களில், 36,607,000 பேர் கத்தோலிக்கர்கள். அதாவது, அந்நாட்டின் 97.6 விழுக்காட்டினர் கத்தோலிக்க மறையைத் தழுவுகிறவர்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 10,379 பங்குத்தளங்களைக் கொண்ட இந்நாட்டில், 156 ஆயர்கள், 30,661 அருள் பணியாளர்கள், 21,174 இருபால் துறவியர், மற்றும், 14,154 மறைக்கல்வி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 3,513 இளையோர், அருள்பணியாளர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலத்திருஅவை நடத்திவரும் 1,425 கல்விக் கூடங்களில், 2,13,940 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 337 மருத்துவமனைகள், 214 முதியோர் இல்லங்கள் மற்றும் 383 அனாதை இல்லங்கள் உட்பட, 3129 பிறரன்பு மையங்கள் வழியே கத்தோலிக்கத் திருஅவை பணியாற்றி வருகின்றது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முதலில் இத்திருத்தூதுப்பயண நிகழ்வுகளை ஆரம்பித்துள்ள கிரக்கோவ் நகரம், போலந்து நாட்டின் இரண்டாவது பெரிய மற்றும் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்நகரில், கல்வி, கலாச்சார மற்றும் கலைக்கூடங்கள் அதிகமாக இருக்கின்றன. போலந்தின் பொருளாதாரத்திற்கும் மிகவும் முக்கியமான நகரம் இது. போலந்தை அரசர்கள் ஆட்சி செய்த 1038ம் ஆண்டிலிருந்து கிரக்கோவ் தலைநகரமாக விளங்கியுள்ளது. 15,16ம் நூற்றாண்டுகள், போலந்தின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. 4ம் கஸ்மீர் அரசர் ஆட்சி காலத்தில், பல்வேறு கலைஞர்கள் கிரக்கோவில் தங்கி பணியாற்றியிருக்கின்றனர். பல தோட்டங்கள், வனங்கள் உட்பட, இந்நகரில், ஏறத்தாழ நாற்பது பூங்காக்கள் உள்ளன. அந்நகரில் ஏறத்தாழ 318.5 ஹெக்டேர் பரப்புக்குப் பூங்காக்கள் உள்ளன. மேலும், கிரக்கோவ் நகரில்தான், இறை இரக்கம் என்ற செய்தியை முதலில் வெளியிட்டு, அதைப் பரப்பிய புனித மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்காவின்(Maria Faustina Kowalska) கல்லறையும், புகழ்பெற்ற இறைஇரக்க திருத்தலமும், இறைஇரக்க இயேசுவின் அற்புதப் படமும் உள்ளன. 

போலந்து நாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செஸ்டக்கோவா கறுப்பு அன்னாமரியா திருத்தலம், Auschwitz வதை முகாம் ஆகிய முக்கிய இடங்களுக்கும் செல்வார். போலந்தின் தெற்குப் பகுதியிலுள்ள செஸ்டக்கோவா நகரம், யஸ்ன கோரா பவுல் துறவு இல்லத்திற்கும், அங்குள்ள கறுப்பு அன்னை மரியா ஓவியத்திற்கும் புகழ்பெற்றது. இத்திருத்தலத்திற்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். கறுப்பு அன்னை மரியா படம், கடந்த 600 ஆண்டுகளாக போலந்து வரலாற்றோடு தொடர்புடையது. இப்படம் பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று, 1384ம் ஆண்டில், லடிஸ்லாஸ் அரசர் இப்படத்துடன் செஸ்டக்கோவாவைக் கடந்துசெல்ல முயற்சித்தபோது, அவரது குதிரை நகர மறுத்தது. இப்படத்தை இங்கே விட்டுச்செல்லுமாறு கனவிலும் அவருக்குச் சொல்லப்பட்டது. அதனால் அரசர் அப்படத்தை அந்நகரிலே விட்டுச் சென்றார் என்று சொல்லப்படுகின்றது.

Auschwitz வதை முகாம், போலந்து நாட்டில் திருத்தந்தை சென்று செபிக்கும் முக்கிய இடங்களில் ஒன்றாகும். இரண்டாம் உலகப்போரின்போது நாத்சி ஜெர்மானியர்களால், போலந்து அரசியல் கைதிகளுக்கென, முதலில், Auschwitz வதை முகாம் 1 அமைக்கப்பட்டது. இங்கு 1940ம் ஆண்டில் கைதிகள் வரத்தொடங்கினர். 1941ம் ஆண்டு செப்டம்பரில், கைதிகள் அழிக்கப்படுவது தொடங்கியது. பின்னர் Auschwitz வதை முகாம் 2 யூதக் கைதிகளுக்கென அமைக்கப்பட்டது. 1942ம் ஆண்டு முதல், 1944ம் ஆண்டு வரை ஐரோப்பாவில் ஜெர்மனி ஆக்ரமித்திருந்த எல்லாப் பகுதிகளிலிருந்தும் யூதர்கள் கொண்டுவரப்பட்டு நச்சு வாயுக்களால் கொல்லப்பட்டனர். 11 இலட்சம் கைதிகள் இங்கு இறந்தனர். இவர்களில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் யூதர்கள். 1947ம் ஆண்டில் இந்த இடங்களை, போலந்து அரசு அருங்காட்சியகமாக மாற்றியது. 1979ல் யுனெஸ்கோ இவற்றை உலக பாரம்பரிய நினைவிடங்களாக அறிவித்தது. Auschwitz வதை முகாமில் புனித மாக்சிமிலியன் கோல்பே (St Maximilian Kolbe) தங்கியிருந்த அறையில், ஜூலை 29ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில மணித்துளிகள், அமைதியாகச் செபிப்பார். Auschwitz வதை முகாமில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு குறிப்பேட்டில் திருத்தந்தை எழுதும் வார்த்தைகள் மட்டுமே அங்கு அவர் கூறும் வார்த்தைகளாக அமையும். வேறு எந்த உரையும் அந்த முகாமில் இடம்பெறாது. நாத்சி வதை முகாமின் கொடுமைகளிலிருந்து மீண்டு, உயிரோடு இருக்கும் 10 பேரை திருத்தந்தை சந்திப்பார். Auschwitz வதை முகாமிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் Birkenau வதை முகாமுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்வார்.

அன்பர்களே, கிரக்கோவில் 31வது உலக இளையோர் தின நிகழ்வுகளை நிறைவு செய்து, ஜூலை 31 ஞாயிறு, உரோம் நேரம் இரவு 8.25 மணியளவில் உரோம் வந்து சேருவார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.