2016-07-27 15:22:00

டோக்கியோ தாக்குதல்களுக்கு, திருத்தந்தையின் அனுதாபத் தந்தி


ஜூலை,27,2016. ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் அமைந்துள்ள Tsukui Yamayurien மாற்றுத் திறனாளிகள் மையத்தில் நடைபெற்ற தாக்குதல்கள், தன்னை ஆழ்ந்த வருத்தத்தில் நிறைத்துள்ளதாகவும், இறந்தோர் மற்றும் காயமுற்றோர் அனைவருக்கும் தான் செபிப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் அனுதாபத் தந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 26, இச்செவ்வாய், விடியற் காலையில் நடைபெற்ற இத்தாக்குதலையொட்டி, டோக்கியோ பேராயர் Peter Takeo Okada அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இத்தந்தியை அனுப்பியுள்ளார்.

இறந்தோர், மற்றும் காயமுற்றோர் அனைவரின் உறவினர்களுக்கு தன் செபங்களை உறுதி செய்த திருத்தந்தை, அமைதியை விரும்பும் ஜப்பான் மக்கள், இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, ஒப்புரவிலும், அமைதியிலும் வாழ தான் இறை ஆசீரை இறைஞ்சுவதாக இச்செய்தியில் கூறியுள்ளார்.

டோக்கியோ பெருநகரின் தெற்கில் அமைந்துள்ள  Tsukui Yamayurien மாற்றுத் திறனாளிகள் மையத்தில் Satoshi Uematsu என்ற மனிதர் மேற்கொண்ட கத்திக் குத்து தாக்குதலில், 19 பேர் கொல்லப்பட்டனர், மேலும், 26 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.