2016-07-26 16:30:00

இந்திய கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப அழைப்பு


ஜூலை,26,2016. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவருவது குறித்த விழிப்புணர்வை மக்களில் ஏற்படுத்தும் நோக்கில், அக்டோபர் மாதம் முதல் தேதியன்று, நாடு முழுவதும் அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய கிறிஸ்தவ சபைகள் இணைந்து முடிவெடுத்துள்ளன.

சிறுபான்மை சமுதாயத்திடம் அச்சத்தை உருவாக்க சில சமூக விரோதக் குழுக்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்த அமைதி போராட்டம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்படல், பாகுபாட்டுடன் நடத்தப்படல், என்பனவற்றை எதிர்த்து இந்தியாவின் அனைத்து கிறிஸ்தவ சமூகங்களும் அந்நாளில் ஒன்றிணைந்து தங்கள் குரலை எழுப்புவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை மதமாற்ற முயல்கிறார்கள் என்ற பொய்யானக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதாக  உரைத்த அனைத்திந்திய கிறிஸ்தவ சிறுபான்மை முன்னணியின் தலைவர் பிலிப் கிறிஸ்டி அவர்கள், 2014ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

2014ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில், 5 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஏறத்தாழ 5000பேர் சித்ரவதைகளை அனுபவித்துன்னர். இது தவிர ஏறத்தாழ 2இலட்சத்து 73 ஆயிரம் சிறுபான்மை மதத்தவர், தாய் மதம் திரும்புதல் என்ற திட்டத்தின் கீழ் உத்தரபிரதேசத்தில் இந்துக்களாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.