2016-07-25 16:11:00

வாரம் ஓர் அலசல் – நம்மை உயர்த்தும் ஏணிப்படிகள்


ஜூலை,25,2016. ஒரு கூட்டத்தில், ஆச்சார்யா வினோபா பாவே அவர்கள், மிகவும் நோயுற்றிருந்த தனது அன்னை பற்றி இவ்வாறு பகிர்ந்துகொண்டார். இவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தனது அன்னையைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார். அப்போது அவரின் அன்னையின் நினைவாற்றல் மிக மிகக் குறைந்து போயிருந்தது. எதையுமே நினைவுபடுத்திச் சொல்ல முடியாத நிலையில் இருந்தார் அவரின் அன்னை. ஆனால், அவரின் அன்னை, உறவினா் ஒருவரைப் பற்றிச் சொல்லி, ‘‘அவள் என் தங்க நெக்லஸை வாங்கிப் போயிருக்கிறாள். ரொம்ப நாளாச்சு! இன்னும் நெக்லஸ் திரும்பல. அதை மறக்காம வாங்கிடணும்”என்றாராம். இதை ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்லி, ஒருவரின் மனதின் ஆற்றல் எவ்வளவு வலிமையானது என்று வியந்து போனாராம் வினோபா பாவே. அன்புள்ளங்களே, நம் வாழ்விலும், எத்தனையோ நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் அந்நிகழ்ச்சிகளைவிட, அவை நம் மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள், நினைவுகளாக இருந்து அதிகம் பாதிக்கின்றன. மனதிற்குத் துன்பம் கொடுத்த, மறக்க வேண்டியவைகளை மறக்க முடியாமல் துன்புறுகிறோம். அதனால் பலவாறு, உடலிலும், மனதிலும் வேதனைகளை அனுபவிக்கின்றோம். இரண்டு பேரோடு சென்று கொண்டிருப்போம். திடீரென, பாதையை மாற்றுவோம் அல்லது அவர்களிடம், நீங்க முன்னால நடங்க, நான் கொஞ்சம் பிந்தி வர்றேன் என்று சொல்லிப் பின்வாங்குவோம். கூட வருகிறவர்கள் குழம்பிப் போவார்கள். அந்தப் பாதையில் நடந்த ஒன்று அந்த நேரம் நினைவுக்கு வரும். மனதில் கலக்கம், பயம் வரும் அல்லது சந்திக்க விரும்பாத ஒருவர் தூரத்தில் வந்துகொண்டிருப்பார், அவரைப் பார்த்தவுடன், அவரிடம் கிடைத்த கசப்பான அனுபவம் நினைவுக்கு வந்து பாதையை மாற்றத் தூண்டும். பத்து வருடங்களுக்கு முன்னர் நம் மனதிற்குப கல்லடிகொடுத்த நபர்களை ஒதுக்கி வைத்தாலும், அவர்களால் பட்ட காயங்களின் பாதிப்புகள், நினைவுகள் மனதைவிட்டு அகல மறுக்கின்றன. அவரை இப்போது பார்த்தாலும் மனது பொறிக்கும் சட்டியாகி, கொதிக்கின்றது.   

இப்படி ஒரு மாதத்திற்கு முன், ஏன் பல ஆண்டுகளுக்கு முன் நடந்தவைகளின் நினைவுகள்கூட மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. புலம்பெயர்ந்த ஒருவர் சொல்கிறார் : “செருப்பில்லாமல் பள்ளி சென்றது, சின்ன சைக்கிளில் ஓடி விழுந்தது, அறியாத வயதில் அக்கம்பக்கத்தார் வீட்டில் சாப்பிட்டது, பத்து வயதில் புலம் பெயர்ந்தது, பாசமான கணவரைப் பதைக்க பதைக்க பறிகொடுத்தது, எதையுமே மறக்க முடியவில்லை” என்று. அன்பர்களே, இந்த நினைவுகள் கசப்பானதில் மட்டுமல்ல;  நல்லதிலும் உண்டு. போகும் வழியில் எங்காவது பத்து ரூபாய் நோட்டு கிடந்தால் எடுத்துக் கொள்வோம். அதன் பிறகு அந்த இடம் வரும்போதெல்லாம், ஏதாவது ரூபாய் நோட்டு கிடக்கிறதா என்று கவனமாகத் தேடுவோம். முன்பின் அறிமுகமில்லாத ஒருவர், இக்கட்டான நேரத்தில், ஆபத்திலிருந்து காப்பாற்றியிருப்பார். அந்த நினைவு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். யார் என்றே தெரியாத அந்த நபர் பற்றிய பசுமையான நினைவுகள் மட்டும் இருக்கும். எனது அம்மா இப்படி இப்படியெல்லாம் செய்தார்கள், இது இதெல்லாம் சொன்னார்கள் என்று, நமது வயதான காலத்திலும் அவர்களை நினைத்து நன்றி சொல்கின்றோம்.

“உன் உதிரம் பாலாய் தந்து, உன் உணவை எனக்குத் தந்து, உன் உறக்கம் கண் விழித்து, உறங்கும் போதும் எனை நினைக்கும் அம்மா, உன்னை என்னால் மறக்க முடியவில்லையே” என்று, தனது தாயை நினைத்து கண் கலங்குகிறார் ஒரு நண்பர். இப்படி, அன்புள்ளங்களே, நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் ஒரு நொடிப்பொழுதாகக்கூட இருக்கும். ஆனால், அதன் நினைவுகள் அவ்வப்போது தலைநீட்டி தம் இருப்பை வெளிப்படுத்தும். எல்லாம் மனம் போடும் கோலங்கள். இந்நினைவுகள் கசப்பாக இருக்கும் அல்லது இனிப்பாக இருக்கும். 1847ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. அன்று, மெக்சிகோ நாட்டின் Ocotlán எனுமிடத்தில் முப்பது நிமிடங்களுக்கு மேலாக, இரண்டாயிரத்துக்கு அதிகமான மக்கள் வானத்தில் தோன்றிய, சிலுவையில் அறையுண்ட இயேசு கிறிஸ்துவைப் பார்த்துள்ளார்கள். அமலமரி கல்லறை சிற்றாலயத்தில் அருள்பணி Julián Navarro அவர்கள், திருப்பலி தொடங்குவதற்கு முன்னர், வானத்தில் வடமேற்குத் திசையில் இரு வெண்மை நிற மேகங்கள் ஒன்று சேர்ந்துள்ளன. அங்கே சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் முழு உருவத்தை மக்கள் பார்த்திருக்கின்றனர். அத்திருப்பலியைக் காண வந்திருந்த மக்களும், அவ்விடத்திற்கு அருகிலிருந்த நகர மக்களும் இக்காட்சியைக் கண்டுள்ளனர். ஆண்டவரே, எங்கள்மீது இரக்கம் வையும் என்று உருக்கமாக வாய்விட்டுச் செபித்திருக்கின்றனர். இந்தப் புதுமையை, அந்த ஊர் பங்குக் குரு அருள்பணி Julián Martín, நகர மேயர் Antonio Jiménez ஆகியோர் உட்பட பலரும் சாட்சி சொல்லியிருக்கின்றனர். இது ஒரு வரலாற்று நிகழ்வு என்று, நேரிடையாகப் பார்த்த பலர் சாட்சியம் சொல்லி, அவற்றை எழுத்து மூலம் பதிவு செய்துள்ளனர். இந்தக் காட்சி “Ocotlán புதுமை”என அழைக்கப்படுகிறது. இதன் 150வது ஆண்டு நிறைவுக்கு, 1997ம் ஆண்டில், புனித திருத்தந்தை ஜான் பால் அவர்கள் தனது ஆசீரைத் தெரிவிக்கும் செய்தியை அனுப்பியிருந்தார். ஆண்டுதோறும் அக்டோபர் 3ம் தேதி, ஆண்டவரின் இரக்கத்தின் நினைவாக, செப்டம்பர் 20ம் தேதியிலிருந்து 13 நாள்களுக்கு விழா நடைபெறுகின்றது. இந்தப் புதுமையை நேரில் கண்டவர்கள் இன்று இல்லை. ஆனால் அதன் நினைவு இன்றும் சிறப்பிக்கப்படுகின்றது. அன்பர்களே, நல்ல நினைவுகள் உடலுக்கும், மனதிற்கும் வலிமை சேர்க்கின்றன. George Dennis Patrick Carlin என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு சிரிப்பு நடிகர், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையிலுள்ள முரண்பாடுகள் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்...

“உயர உயரமான கட்டடங்களை எழுப்பியிருக்கிறோம்; ஆனால், நம் மனது மட்டும் இன்னும் வளராமல் குட்டையாவே இருக்கிறது. அகல அகலமான சாலைகளுக்குக் குறைவே இல்லை; ஆனால், நம் பார்வை மட்டும் குறுகலாகத்தான் இருக்கிறது. நிறைய வாங்கிக் குவிக்கிறோம்; ஆனால், அனுபவிக்கிறது குறைவுதான். வீடுகள் பெரியதாக இருக்கின்றன; ஆனால், குடும்பம்தான் சிறுத்துப் போய்விட்டது. வீட்டில் வசதிகள் அதிகம்; ஆனால், அனுபவிக்கிற நேரம் குறைவு! நம்மிடம் படிப்பு அதிகம்; அதற்குரிய பண்பு குறைவு. நிறையத் தெரிந்து வைத்திருக்கிறோம்; ஆனால், எதையும் புரிந்துகொள்கிற பக்குவம் இல்லை. நிறைய மருந்துகள் இருக்கின்றன; அதைவிட அதிகமாக நோய்களும் இருக்கின்றன. நிறைய நிபுணர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்; ஆனால், பிரச்சனைகளுக்கும் குறைவில்லை. அதிகம் குடிக்கிறோம்; அதிகம் புகைக்கிறோம்; பொறுப்பற்ற வகைகளில் நேரத்தை அதிகம் செலவு செய்கிறோம்; தாமதமாகத் தூங்கப் போகிறோம்; களைப்பாக எழுந்திருக்கிறோம்; கொஞ்சமாக வாசிக்கிறோம்; கொஞ்சமாகச் சிரிக்கிறோம்; எப்போதாவது பிரார்த்தனை செய்கிறோம். நம்முடைய சொத்துக்களைப் பெருக்கிக்கொண்டோம்; நம்முடைய மதிப்பைக் குறைத்துக்கொண்டோம். திடீரென ஒருவரை வெறுத்து விடுகிறோம்; ஆனால், அன்பு செலுத்த மட்டும் ஆயிரம் யோசிக்கிறோம். நன்றாகப் பேசக் கற்றுக்கொண்டிருக்கிறோம்; ஆனால், நல்லதாகப் பேசக் கற்றுக்கொள்ளவில்லை.

வாழ்க்கைக்குத் தேவையானது என்ன என்று தெரிந்து வைத்திருக்கிறோம்; ஆனால், வாழத்தான் தெரிந்துவைக்கவில்லை. நிலவுக்குப் போய் அங்கே என்ன இருக்கிறது, என்ன இல்லை என்று பார்த்துவிட்டோம்; ஆனால், நம் பக்கத்து ஃப்ளாட்டில் யார் இருக்கிறார்கள், அவர்கள் தேவை என்னவென்று பார்க்க விரும்பவில்லை. பெரிய பெரிய விடயங்களைப் பண்ணுகிறோம்; அரிய விடயங்கள் பற்றி சிந்திக்கிறதுகூட இல்லை. நாம் வெளி உலகை வெல்ல ஆசைப்படுகிறோம்; ஆனால், அக உலகை அடைய முயற்சி செய்வது இல்லை. இப்படி இன்னும் பல சொல்லியிருக்கிறார் சமூக ஆர்வலரான George Carlin.  அன்பு நேயர்களே, ஐரோப்பிய நாடுகளிலும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலும், இந்நாள்களில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்புகள் மற்றும் வன்முறைகள் பற்றிக் கேள்விப்படுகிறோம். நாடுகளில் பலத்த பாதுகாப்புக்களையும் மீறி பல அப்பாவிகள் பலியாகின்றனர். சிரியாவிலிருந்து புலம்பெயரும் மக்களை ஏற்கும் ஜெர்மனி, கடந்த ஏழு நாள்களில் நான்கு முறைகள், புலம்பெயர்ந்தவர்கள் நடத்திய இரத்தம் சிந்தும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. இவற்றில் பலர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.  இந்நிகழ்வுகள், இம்மக்களுக்கு மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும். எனவே, அன்பு நெஞ்சங்களே, நல்ல நினைவுகளே நம் மனதை எப்போதும் ஆக்ரமிக்கட்டும். மற்றவரில் நல்ல நினைவுகளை விதைப்பவர்களாகவே நாம் வாழ்வோம். நம் வாழ்வில், கசப்பான நினைவுகளுக்குக் காரணமானவர்களை மறக்கவும், மன்னிக்கவும் முயற்சிப்போம். இது கடினமாக இருந்தால், இறைவா, மறக்க வேண்டியதை மறக்க வரம் தாரும் என மன்றாடுவோம். இறைவன் நமக்கென வைத்திருக்கும் திட்டங்களும் நன்மைக்கு ஏதுவான நினைவுகளே(cfஎரே.29:11). எனவே பழைய நல்ல நினைவுகளே, உங்கள் நினைவில் புதுப்பிக்கப்படட்டும். நல்ல நினைவுகளே நல்ல விளைவுகளை உண்டாக்கும். நல்ல நினைவுகளே நம்மை உயிர்த்துடிப்புடன் வைக்கின்றன. நல்ல நினைவுகளே நம்மை உயர்த்தும் ஏணிப்படிகள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.