2016-07-25 16:33:00

மியூனிக் தாக்குதலுக்கு திருத்தந்தை 16ம்பெனடிக்ட் ஆழ்ந்த கவலை


ஜூலை,25,2016. மேலும், மியூனிக் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயராகிய, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், இந்த வன்முறைக்கு, தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, இதில் பலியானவர்களுக்குத் தனது செபங்களையும் வெளியிட்டுள்ளார்.

சமுதாயத்தை அச்சத்தில் ஆழ்த்தும் இந்த வன்முறைச் செயல்களுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இந்தக் கொடூரக் குற்றம், தன்னை மிகவும் பாதித்து, தனக்கு ஆழ்ந்த வேதனையைக் கொடுத்திருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

இன்னும், மரணத்தை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தனது செபத்தையும் தெரிவித்துள்ள, ஜெர்மன் ஆயர் பேரவைத் தலைவரான, மியூனிக் பேராயர் கர்தினால் ரெயினார்டு மார்க்ஸ் அவர்கள், இதில் காயமடைந்தவர்கள், விரைவில் இல்லம் திரும்புவார்கள் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.

ஏறத்தாழ, நாளொரு வண்ணம், வன்முறை, மற்றும் வெறுப்பின் செயல்களைத் தாங்கள் பார்த்துக்கொண்டிருப்பதாகவும், பல இடங்களில், இந்த நச்சுத்தன்மை மிக்க வன்முறை, மக்களில் பயத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார், கர்தினால் மார்க்ஸ். 

1977ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டு வரை, மியூனிக் உயர்மறைமாவட்ட பேராயராகப் பணியாற்றியவர் கர்தினால் ஜோசப் இராட்சிங்கர். இவர்தான் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.