2016-07-25 16:09:00

தொடர் செபம், விசுவாசத்தையும் பொறுமையையும் பலப்படுத்துகிறது


ஜூலை,25,2016. உணவு, மன்னிப்பு, மற்றும் சோதனைகளை மேற்கொள்வதற்கான உதவி ஆகியவை இன்றி ஒவ்வொரு மனிதனின் வாழ்வும், சுமுகமாக இயங்கமுடியாது என்பதை இயேசு நமக்குக் கற்பித்த செபம் சொல்லித் தருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார்.

புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரையில், நாம் நம் உணவுக்காக இறைவனிடம் வேண்டுவது, மிகுதியான உணவு அல்ல, மாறாக, அன்றன்றைக்குத் தேவையான உணவையே, ஏனெனில் மிகுதியான உணவு என்பது வீணாக்கலுக்கும், நம் பயணத்தின் சுமையை அதிகரிக்கவுமே வழிவகுக்கும் எனக் கூறினார்.

இறைவனிடமிருந்து நம் பாவங்களுக்காக மன்னிப்பைப் பெற்று ஒப்புரவாகும் நாம், நம் சகோதரர்களுடனும் ஒப்புரவை உருவாக்குபவர்களாக செயல்படவேண்டும் என்றும், தான் மன்னிக்கப்பட்டதாக உணரும் இதயத்திலிருந்தே அனைத்தும் ஊற்றெடுக்கின்றன எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்தியம்பினார். 

தீமைகள் மற்றும் சுரண்டல்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலையில் இருக்கும் நாம், நம் நிலையை உணர்ந்தவர்களாக, இறைவனை நோக்கி, 'எங்களை சோதனையில் விழவிடாதேயும்' என வேண்டுகிறோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு கற்பித்த செபத்தைத் தொடர்ந்து இயேசு உரைத்த இரு உவமைகள் குறித்தும் தன் கருத்துக்களை வழங்கினார்.

இறைவனில் முழு நம்பிக்கை வைக்கவேண்டும் என்பதை நமக்குப் போதிக்கும் இந்த இரு உவமைகளிலும், இறைவனிடம் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்பது, நம் தேவை குறித்து அவரை நம்பவைப்பதற்காக அல்ல, மாறாக, நம் விசுவாசத்தையும், பொறுமையையும் பலப்படுத்துவதற்கே, ஏனெனில், அதன் வழியாகவே நாம் நம் தேவைகளுக்காக, இறைவனுடன் இணைந்து முன்னோக்கிச் செல்கிறோம் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'தீயோராகிய நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு நற்கொடைகளை வழங்க அறிந்திருக்கும்போது, விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்கு தூய ஆவியை வழங்குவார்' என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம், நன்முறையில் ஞானம் மற்றும் அன்புடனும், இறைவிருப்பத்தை நிறைவேற்றுபவர்களாகவும் வாழ்வதற்கு தூய ஆவி உதவுகிறார் எனவும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.