2016-07-25 16:05:00

இது இரக்கத்தின் காலம் : உணர்வதற்கு இதயம் வேண்டும்


மக்கள் நெருக்கம் மிகுந்த ஒரு சாலையில், ஒரு தாய், இடுப்பில் குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவரின், அழுக்கான, அருவருப்பான தோற்றத்தைக் கண்டு யாரும் பிச்சை போடவில்லை. எல்லாரும் அவசர அவசரமாக விலகித்தான் சென்றார்கள். ஆனால் அந்தத் தாயின் இடுப்பில் இருந்த குழந்தை பசி தாங்காமல் அழுதுகொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு காப்பிக் கடை வாசல்முன் நின்று, அந்தக் குழந்தையைக் காட்டி காப்பி கேட்டார் அந்தத் தாய். கடைக்காரரும், வாய்க்குவந்தபடி திட்டி விரட்டினாரே தவிர, அழுதுகொண்டிருந்த குழந்தை மீது கொஞ்சமும் இரக்கம் காட்டவில்லை. இந்தத் துயரம், அந்த வழியாய்ச் சென்ற யார் மனதையும் பாதிக்கவே இல்லை. ஆனால், அந்த இடத்திற்குப் பிச்சைக் கேட்டு வந்துகொண்டிருந்த ஒரு சிறுமியின் மனதைத் தொட்டது. அந்தத் தாயின் இடுப்பில் அழுதுகொண்டிருந்த குழந்தையிடம், அச்சச்சோ... பசிக்குதாடா செல்லம்.. அழாதீங்க.. என்று தேற்றியபடி, தனது அலுமினியத் தட்டில் கிடந்த சில்லறைக் காசுகளை, அந்த காப்பிக் கடைக்காரர்முன் கொட்டி, ரொம்ப ஜாஸ்தியாகப் பேசாதே.. காசு குடுத்துட்டேன், காப்பி கொடு என மிரட்டிவிட்டு, காலியான தனது அலுமினியத் தட்டைத் தலையில் கவிழ்த்தபடி, ஏதோ ஒரு திரைப்பட பாடலைப் பாடியபடி அந்த இடத்தைவிட்டுச் சென்று விட்டார். நாளிதழ் ஒன்றில் வெளியான நிகழ்வு இது.

தான் பிச்சை எடுக்கும் நிலையிலும், பசியினால் அழும் கைக்குழந்தையின் நிலை கண்டு இரங்கி, தன் வயிற்றுப் பசியைத் தியாகம் செய்தார் அச்சிறுமி. சுவாமி விவேகானந்தர் சொன்னார் - நம் வாழ்வுக்குத் தேவையான விடயங்களில் ஒன்று, உணர்வதற்கான இதயம் என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.