2016-07-22 15:16:00

தென் சூடானில் அமைதியை வலியுறுத்த திருத்தந்தையின் பிரதிநிதி


ஜூலை,22,2016. தென் சூடானில் அதிகரித்துள்ள வன்முறைக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காக, அந்நாட்டிற்கு, உயர்மட்ட பிரதிநிதி ஒருவரை அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பிரதிநிதியாக, தென் சூடான் சென்ற, திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், தலைநகர் ஜூபாவில், அரசுத்தலைவர் Salva Kiir அவர்களைச் சந்தித்து, திருத்தந்தையின் சார்பில் இரு கடிதங்களைச் சமர்ப்பித்தார். அவற்றில் ஒன்று, அந்நாட்டின் அரசுத்தலைவருக்கும், மற்றொன்று, அந்நாட்டின் உதவி அரசுத்தலைவர்க்குமென எழுதப்பட்டிருந்தன.

இப்பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் டர்க்சன் அவர்கள், திருத்தந்தை, அக்கடிதங்களில், தென் சூடானில் அமைதிக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்றும், ஆயுத மோதல்கள் போதும், போதும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இருந்தார் என்றும் கூறினார்.

இத்தகைய கடினமான சூழல்கள் திருத்தந்தையின் இதயத்தில் எப்போதும் இருப்பதாகவும், அந்நாட்டிற்குத் திருத்தந்தை செல்ல விரும்பியதாகவும் மேலும் தெரிவித்தார் கர்தினால் டர்க்சன்.

தென் சூடான் அரசுத்தலைவர் Kiir, உதவி அரசுத்தலைவர் Riek Machar ஆகிய இருவருக்கும் இடையேயான அரசியல் போட்டிகளால், 2013ம் ஆண்டு டிசம்பரில் வன்முறை வெடித்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். மேலும், ஏறத்தாழ ஓராண்டளவாக உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த அந்நாட்டில், தற்போது மோதல்கள் தொடங்கியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.