2016-07-21 15:07:00

இது இரக்கத்தின் காலம் : கருணை பொங்கக் கொடுத்தால்...


சாலையில் ஒரு துறவி உட்கார்ந்து தவம் செய்துகொண்டிருந்தார். அவர் முன்பு ஒரு பிச்சை பாத்திரம் இருந்தது. அவரைப் பார்த்த ஒரு வணிகருக்கு, தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே, தன் பையிலிருந்து காசை எடுத்து, அவருக்குப் பிச்சையாகப் போட்டு வணங்கினார். பின்னர் கடைக்குப் போனார். நெடுநாள்களாக அவருக்கு வரவேண்டியிருந்த ஒரு பெருந்தொகை அன்று வந்து சேர்ந்தது. அதைவிட வேடிக்கை. அன்று வியாபாரம் வழக்கத்தைவிட கூடுதலாக நடந்தது. இது துறவியின் சக்தியோ என்று வணிகருக்குத் தோன்றியது. மறுநாளும் அந்தத் துறவியின் பிச்சை பாத்திரத்தில் காசு போட்டார். அன்றும் வியாபாரம் செழிப்பாக நடந்தது. இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டாமே என்று அவர் தொடர்ந்தார். பெரிய பணக்காரராகிவிட்டார். ஒருநாள் வழக்கம்போல் துறவியைப் பார்க்கச் சென்றார். அப்போது அந்தத் துறவி, தனது குருவின் காலில் விழுந்து ஆசி பெற்றுக்கொண்டிருந்தார். வணிகருக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு. சில்லறைக் காசுகள் போட்ட இவருக்கே இவ்வளவு வல்லமை என்றால், இவரின் குருவுக்கு அவரைவிட எவ்வளவு சக்தி இருக்கும் என்று நினைத்து, அந்தத் துறவிக்கு வழக்கமாகப் போடும் காசை அவருக்குப் போடாமல், குருவின்முன் இருந்த பிச்சை பாத்திரத்தில் போட்டுவிட்டு, கடைக்குச் சென்று ஆவலோடு காத்திருந்தார். ஆனால் நடந்ததோ தலைகீழ். அரசு அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர். தெருவில், புதுக்கடை ஒருவர் திறந்தார். குருவுக்குக் காசு போடப் போட வணிகருக்கு மேலும் மேலும் நட்டம். மனம் உடைந்தபோன வணிகர், குருவிடம் சென்று உண்மையைச் சொன்னார். குரு சிரித்தபடி சொன்னார் – மகனே, கருணை பொங்க, தகுதி பாராது, அன்பால் நீ துறவிக்குக் காசு போட்டாய். கடவுளும் உன் தகுதி எல்லாம் பாராது, கருணை பொழிந்தார். நீ பிறரிடம் எப்படி நடந்து கொள்கிறாயோ, அப்படித்தான் உன்னிடமும், கடவுள் நடந்து கொள்கிறார் என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.