2016-07-21 15:46:00

அமெரிக்க இனவெறி பிரச்சனையைத் தீர்க்க வேண்டுதல் பயணங்கள்


ஜூலை,21,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாகியுள்ள இனவெறி பிரச்சனை, மற்றும், காவல் துறையினருக்கு எதிரான பிரச்சனை இவற்றைத் தீர்ப்பதற்கு, டல்லஸ் நகரின் புனித பிலிப் நேரி பங்குக் கோவிலில் வேண்டுதல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்மாதம் ஜூலை 31ம் தேதி, ஞாயிறு முடிய, ஒவ்வொரு ஞாயிறும் பிற்பகல் வேளையில் நடைபெறும் இந்த முயற்சியில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிவருவதாக, CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

இந்த முயற்சியைத் துவக்கிவைத்த, புனித பிலிப் நேரி பங்குத் தந்தை, அருள்பணி Christopher Wadelton அவர்கள், அமைதி, ஒவ்வொருவர் உள்ளத்திலிருந்து துவங்கி, நமது சுற்றுப்புறத்திலும், இவ்வுலகிலும் பரவவேண்டும் என்று கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டை தற்போது சூழ்ந்திருக்கும் பிரச்சனைகள் பல்வேறு வழிகளில் விவாதிக்கப்பட்டு வருவத்தைச் சுட்டிக்காட்டிய அருள்பணி Wadelton அவர்கள், நமது விவாதங்களில் இறைவன் என்ற வார்த்தை இடம் பெறாமல் போனதே, நமது பிரச்சனைகளை அதிகமாக வளர்த்துள்ளது என்று குறிப்பிட்டார்.   

மத நம்பிக்கையால் தூண்டப்பட்டு, மக்கள் மேற்கொள்ளும் இத்தகைய வேண்டுதல் ஊர்வலம், அமைதி பிறக்கும் என்ற நம்பிக்கையைத் தருகிறது என்று, காவல் துறை அதிகாரி, Matt Carroll அவர்கள் கூறினார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.