2016-07-21 15:30:00

Auschwitz வதை முகாமில் திருத்தந்தை செலவிடும் நேரம்


ஜூலை,21,2016. புனித மாக்சிமிலியன் கோல்பே (St Maximilian Kolbe), தன்னை மரணத்திற்கு கையளித்த ஜூலை 29ம் தேதி, Auschwitz வதை முகாமில், அப்புனிதர் தங்கியிருந்த அறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில மணித்துளிகள், அமைதியான செபத்தில் ஈடுபடுவார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர், அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

இம்மாத இறுதியில் போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் 31வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ளச் செல்லும் பயணம் குறித்து, இப்புதனன்று செய்தியாளர்களிடம் விவரித்த இயேசுசபை அருள்பணி லொம்பார்தி அவர்கள், Auschwitz வதை முகாமில் திருத்தந்தை செலவிடும் நேரம் குறித்து சிறப்பாக விளக்கம் அளித்தார்.

அர்மேனியாவில் திருத்தூது பயணம் முடித்து திரும்பி வந்த வேளையில், விமானப் பயணத்தில் Auschwitz வதை முகாமுக்கு சென்று அமைதியாக செபிக்க விழைவதாகவும், அந்நேரத்தில் கண்ணீர் விட்டு அழுவதற்கு இறைவன் தனக்கு அருள் தரவேண்டுமென்றும் திருத்தந்தை கூறியதை, அருள்பணி லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு நினைவுபடுத்தினார்.

Auschwitz வதை முகாமில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு குறிப்பேட்டில் திருத்தந்தை எழுதும் வார்த்தைகள் மட்டுமே அங்கு அவர் கூறும் வார்த்தைகளாக அமையும் என்றும், வேறு எந்த உரையும் அந்த முகாமில் இடம்பெறாது என்றும், அருள்பணி லொம்பார்தி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

நாத்சி வதை முகாமின் கொடுமைகளிலிருந்து மீண்டு, உயிரோடு இருக்கும் 10 பேரை திருத்தந்தை சந்திப்பார் என்றும், Auschwitz வதை முகாமிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கும் Birkenau வதை முகாமுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்வார் என்றும், அருள்பணி லொம்பார்தி அவர்கள், செய்தியாளர்களிடம் விளக்கினார்.

போலந்து தலத் திருஅவையின் சார்பில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அருள்பணி Pavel Rytel-Andrianik அவர்கள் பேசுகையில், " கிரக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் 70க்கும் மேற்பட்ட கர்தினால்களும், 800க்கும் அதிகமான ஆயர்களும் கலந்துகொள்கின்றனர்" என்பதைக் குறிப்பிட்டு, 2ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பின், ஆயர்களும், கர்தினால்களும் இத்தகைய எண்ணிக்கையில் கூடுவது இத்தருணமே என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.