2016-07-20 15:33:00

நீஸ் நகரத் தலைவர்களுடன் திருத்தந்தை தொலைபேசித் தொடர்பு


ஜூலை,20,2016. பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டு, அந்நகரின் தலைவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டார்.

ஜூலை 14, கடந்த  வியாழன் இரவு நடைபெற்ற வன்முறை தாக்குதலைத் தொடர்ந்து, நீஸ் நகர மேயர், Christian Estrosi அவர்களுடனும், நீஸ் நகரில் இயங்கிவரும் பிரெஞ்சு இத்தாலிய நட்பு (Amitié France-Italie) என்ற கழகத்தின் தலைவர் Paolo Celi அவர்களுடனும் திருத்தந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

"உங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்?" என்பது திருத்தந்தையின் முதல் கேள்வியாக இருந்தது என்றும், இறந்தோரின் குடும்பங்களை தான் விரைவில் சந்திக்க விழைவதாக திருத்தந்தை கூறினார் என்றும் நீஸ் நகர மேயர், Estrosi அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

திருத்தந்தை தொலைபேசியில் அழைத்தார் என்ற செய்தி, வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பெரும் ஆறுதலைத் தந்தது என்று, மேயர், Estrosi அவர்கள், தன் பேட்டியில் கூறினார்.

திருத்தந்தையின் சந்திப்பு எப்போது நிகழும் என்பது குறித்து உறுதியான தேதிகள் குறிக்கப்படவில்லை என்றும், மேயர், Estrosi அவர்கள் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.