2016-07-20 15:24:00

திருத்தந்தையின் போலந்து திருத்தூதுப் பயண விளக்கம்


ஜூலை,20,2016. இறை இரக்கம் என்ற செய்தி வெளியிடப்பட்ட போலந்து நாட்டில், "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்" (மத். 5:7) என்ற மையக் கருத்துடன் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ளச் செல்கிறார் என்று திருப்பீட செய்தித் தொடர்பாளர், அருள்பணி பெத்தெரிக்கோ லொம்பார்தி அவர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

இப்புதன் காலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய இயேசு சபை அருள் பணியாளர் லொம்பார்தி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது வாழ்நாளில் முதல் முறையாக போலந்து நாட்டிற்குச் செல்கிறார் என்றும், இப்பயணம், அவரது 15வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் என்றும், இப்பயணங்களில் அவர் இதுவரை 23 நாடுகளை பார்வையிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

போலந்து நாட்டில் பிறந்த புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், அந்நாட்டிற்கு 9 முறை பயணங்கள் மேற்கொண்டார் என்றும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2006ம் ஆண்டு அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜூலை 27ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு உரோம் நகரிலிருந்து புறப்படும் பயணத்தின் பல முக்கிய நிகழ்வுகளையும் விளக்கிக் கூறிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், உள்ளூர் நேரம் மாலை 4 மணியளவில் கிரக்கோவ் செல்லும் திருத்தந்தையை, போலந்து அரசுத்தலைவர் Andrzej Duda அவர்கள் வரவேற்பார் என்றும், இப்பயணத்தின் பல்வேறு நிகழ்வுகளில் அரசுத்தலைவர் பங்குகொள்வார் என்றும் தெரிவித்தார்.

ஜூலை 28, வியாழனன்று, திருத்தந்தை, கிரக்கோவ் நகர மேயர் மற்றும் இளம் மாற்றுத்திறனாளிகளுடன், ஒரு மினி இரயிலில் உலக இளையோர் தினக் கொண்டாட்டம் நடைபெறும் வளாகத்திற்குச் செல்வார் என்றும், அங்கு அந்நகரத்தின் சாவியை திருத்தந்தைக்கு அளிப்பார்கள் என்றும், பின்னர் அங்கிருந்து திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றச் செல்லும் வளாகத்திற்கும் அதே வாகனத்தில் மாற்றுத்திறனாளிகளுடன் செல்வார் என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

ஜூலை 29, 30 ஆகிய நாள்களின் உலக இளையோர் தின நிறைவு நிகழ்வுகளில் 15 இலட்சம் முதல் 18 இலட்சம் இளையோர் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதிகமான இளையோர் பங்கெடுக்கும் நாடுகளாக, போலந்து, இத்தாலி, இஸ்பெயின், அமெரிக்க ஐக்கிய நாடு, ஜெர்மனி, பிரான்ஸ், உக்ரைன், போர்த்துக்கல் ஆகியவை உள்ளன என்றும், 800 ஆயர்கள், 70 கர்தினால்கள் முதல் முறையாக, இவ்விடத்தில் கூடுகின்றனர் என்றும் விளக்கினார் அருள்பணி லொம்பார்தி

கிரக்கோவில் 31வது உலக இளையோர் தினத்தை நிறைவு செய்து, ஜூலை 31 ஞாயிறன்று, உரோம் வந்து சேருவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.