2016-07-20 14:35:00

இரக்கத்தின் தூதர்கள் – அருளாளர் அன்னை தெரேசா பாகம் 8


ஜூலை,20,2016.  ஆலய மணியின் நாவு சிறியதுதான் ஆனால், அது எழுப்பும் இனிய ஓசை, எங்கெங்கோ, எதையெல்லாமோ கடந்து சென்று ஒலிக்கிறது. அந்த ஒலி கேட்டு எத்தனை எத்தனை இதயங்கள் விழித்தெழுகின்றன. அன்னை தெரேசா அவர்களும் ஒரு கோவில் மணிதான். அன்னையின் உயரம் நான்கு அடிதான். ஆனால் இந்த உருவம் சாதித்திருக்கும் சாதனைகள் கடல் கடந்து, மலைகள் தவழ்ந்து, உலகெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அன்னை, ஏழைகளிலும் ஏழைகள் மீது காட்டிய கருணையும் இரக்கமும் அவரின் புகழ் மணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. பங்களாதேஷ் விடுதலைப் போரின்போது அன்னை ஆற்றிய நிவாரணப் பணிகள் உலகையே வியப்பில் ஆழ்த்தின. சமூகத்தில் கடைப்பட்டவர்களிடம் தெய்வத்தைக் காண்பது, அதற்குக் கடவுளிடம் முழுமையாகச் சரணடைந்து விடுவது, இதுவே அன்னை தெரேசா தொடங்கிய சபையின் இலட்சியம். மனதில் சாந்தி இல்லையென்றால், கட்டுப்பாடுகளும், கஷ்டங்களும் நிறைந்த இந்த இலட்சிய வாழ்க்கை கசந்துவிடும். எனது சபையில் சேர வருகின்றவர்களிடம் இந்தப் பண்புகள் இல்லையென்றால் நான் அவர்களை அனுமதிப்பதில்லை எனச் சொல்லியிருக்கிறார் அன்னை தெரேசா.

இந்த இலட்சிய வாழ்க்கை கடினமானதுதான். ஆனால், நிராதரவாக நடமாடும் தெய்வங்களுக்காக நம்முடைய சொந்த சுக துக்கங்களைத் துறந்து விடுவதில் கிடைக்கும் மனச்சுதந்திரம் வேறு எதிலும் கிடைப்பதில்லை. உடைமைகள், உறவுகள் இவையெல்லாம் எனது சபையின் இலட்சியத்தை அடையவிடாமல் தடுக்கும் முட்டுக்கட்டைகள். ஏழைகளைப் புரிந்துகொள்வதற்கு, ஏழையாகவே வாழ ஆசைப்படுகிறேன். நம்மிடம் ஒன்றுமில்லாமல் சூன்யமாகிவிடும்போது தெய்வத்தின் அருள் நிச்சயமாகக் கிட்டிவிடும் என்றார் அன்னை தெரேசா. அன்பு நேயர்களே, தனக்கென எதையும் தேடாமல், பிறருக்காக வாழ்வை அர்ப்பணிப்பதில் கிடைக்கும் மனசுகம் வேறெதிலும் கிடைப்பதில்லை. இந்த ஒருநிலையில் இறைவன் அருள் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதை அன்னை தெரேசா உட்பட, எத்தனையோ மாமனிதர்களின்  வாழ்வில் பார்க்கிறோம். அன்னை, தனது குடும்பத்தைவிட்டு வந்த பிறகு அவரது தாயை அவர் சந்தித்ததே கிடையாது. ஆனால் அதற்காக அவர் வருந்தியதும் இல்லை. அவர் அன்புப் பணியாற்றிய உள்ளங்களில் கிடைத்தற்கரிய பல அன்னையரைக் கண்டார். அவரே, உலகம் போற்றும் அன்னையாக விளங்குகிறார். சிவகங்கை மறைமாவட்டம் சருகணியில் தனது கடைசி காலத்தைச் செலவிட்ட, இறையடியார் இயேசு சபை அருள்பணியாளர் லூயி லெவே அவர்கள், இளவயதில் பிரான்ஸ் நாட்டிலிருந்து தமிழகம் வந்தார். அதன்பின்னர் அவர் பிரான்ஸ் செல்லவே இல்லை. அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தமிழகத்திலே மறைப்பணியாற்றி தமிழகத்திலே இயற்கை எய்தினார் அருள்பணி லெவே. இப்படி தாயகம்விட்டு வேறு நாடுகளுக்கு, அதுவும், கண்டம்விட்டு கண்டம் சென்று பலர் மறைப்பணியாற்றியிருக்கின்றனர், இன்றும் மறைப்பணியாற்றி வருகின்றனர். கடினமான சூழல், கடினமான வாழ்க்கை, உள்ளூர் மக்களின் எதிர்ப்பு... இப்படி பல சூழல்களில் இறைவனை மட்டுமே நம்பி, மக்கள்பணி ஆற்றுபவர்கள் இவர்கள். தன்னை நம்பியவர்களை இறைவன் கைவிடவே மாட்டார் என்பதற்கு, இவர்கள் எல்லாம் உயிருள்ள சான்றுகள். ஏனெனில் இவர்களில் சிலரின் வாழ்வை நேரிடையாகப் பார்த்தவர்கள் இன்றும் சாட்சியம் பகர்கின்றனர்.

 

பொதுவாக, அர்ப்பண வாழ்வு வாழும் ஆண்களும், பெண்களும், கற்பு, ஏழ்மை, பணிவு என்ற மூன்று வார்த்தைப்பாடுகளை எடுக்கின்றனர். அதாவது இந்த மூன்றையும் யாருடைய வற்புறுத்தலுமின்றி, மனம் இசைந்து, தங்கள் வாழ்வு முழுவதும் கடைப்பிடிக்கிறோம் என அவர்கள் உறுதி எடுக்கின்றனர். ஆனால் அன்னை தெரேசா சபையினர், கற்பு, ஏழ்மை, பணிவு என்ற மூன்று வார்த்தைப்பாடுகளுடன், மற்றவர்மீது அன்பு காட்டுதல் என்ற நான்காவது வார்த்தைப்பாட்டையும் எடுக்கின்றனர். மற்றவர்மீது அன்பு காட்டுதல் என்ற நான்காவது வார்த்தைப்பாட்டை எடுப்பதற்கு அன்னை காரணம் சொல்லியிருக்கிறார். எச்சூழ்நிலையிலும், சமுதாயத்தில் கடைப்பட்டவர்களைவிட்டு இச்சபையினர் விலகிவிடாமல் இருப்பதற்கு அமைத்துக்கொண்ட வேலிதான் இது. தெய்வத்தின் வடிவில் வறுமையில் வாடும் கடைப்பட்டவர்களுக்கு, ஆத்மார்த்தமாக இலவசப்பணி ஆற்றுவதுதான் இந்த நான்காவது வார்த்தைப்பாட்டின் நோக்கம். இந்த நோக்கம், கடவுள் எனது சபைக்கு தந்த அருள். நான் கடவுளின் வேலையைச் செய்யும் சாதாரண கருவி. இந்த எண்ணமே, போராட்டங்கள் நிறைந்த தொலைதூரப் பாதையில் என்னை வழிகாட்டி அழைத்துச் செல்கின்றது என்றார் அன்னை தெரேசா.

அன்னை தெரேசா அவர்கள், பெண்களுக்கும், ஆண்களுக்கும் என, தனித்தனி சபைகளை ஆரம்பித்ததோடு, ‘Co-Workers’ அதாவது உடன் உழைப்பாளர்கள் என்ற ஓர் இயக்கத்தையும் தொடங்கினார். வறியவர்களுக்குச் சேவையாற்றுவதற்காக தங்களின் வாழ்வு முழுவதையும் அர்ப்பணிக்க இயலாதவர்கள், அவர்களுக்கு இயன்ற நேரங்களில் தங்களாலான உதவிகளைச் செய்வதற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினார். இதில் யாரும் இணையலாம். ஏழை, செல்வந்தர், மாற்றுத்திறனாளிகள் என, பலதரப்பட்டவர்கள் இதில் உள்ளனர். இன்றும், மேற்குலக நாடுகளிலிருந்து, பல தன்னார்வலர்கள், விடுமுறை காலங்களில், அன்னை தெரேசா சபை இல்லங்களில் பணியாற்றச் செல்கின்றனர். உரோமையில் இச்சபையினர் நடத்தும் மையங்களிலும், இன்னும் பிற பிறரன்பு மையங்களிலும், பலர் சென்று சிலமணி நேரங்கள் உதவி செய்கின்றனர்.     

அன்னை தெரேசா அவர்கள் பற்றிப் பேசாத ஊடகங்களே இல்லை. இறந்துகொண்டிருப்பவர்களுக்கு ஏன் சேவையாற்ற வேண்டும் என்ற விமர்சனங்களை எழுப்பியுள்ள ஊடகங்களும் உண்டு. எனினும், அன்னை பற்றி புகழ்ந்து பேசும் செய்திகளே அதிகம். விளம்பரங்களுக்காகவே பலர் உதவிகளைப் புரியும் உலகில், அன்னை  அவர்கள், தனக்குக் கிடைக்கும் விளம்பரங்கள், தனக்குக் கிடைப்பதாகவே நினைத்ததில்லை. அதேபோல் தன்னுடைய சேவைகளைப் பாராட்டிக் கொடுக்கப்படும் விருதுகள் தனக்காகத் தரப்படுபவை அல்ல. மாறாக, தனது சபையில் தங்களையே கரைத்துக்கொண்டுவிட்ட இளம் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தரப்படும் ஊக்கமாகக் கருதுவதாக ஒருமுறை தெரிவித்திருக்கிறார். ஏனென்றால், நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில், இந்த அறப்பணியை எனது சபையினர் செய்துகொண்டுதான் இருப்பார்கள். அதனால் விளம்பரங்களையும், விருதுகளையும் எனது சபையின் வேலைகளில் ஒரு பகுதியாகவே கருதுகிறேன் என்று சொல்லியிருக்கிறார் அன்னை தெரேசா.

அன்னை தெரேசா அவர்கள் டெல்லியில் சிசுபவன் தொடங்கியபோது, அதன் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு, நேருவும், கிருஷ்ணமேனனும் சென்றிருந்தனர். அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்ற அன்னை தெரேசா, முதலில் இவ்வீட்டின் தலைவரைச் சந்திப்போம் என அவர்களை அழைத்துச் சென்றார். அவர்கள் ஒன்றும் புரியாமல் அன்னையைப் பின்தொடர்ந்தனர். அவர்களை அங்கிருந்த சிறிய ஆலயத்திற்கு அழைத்துச் சென்று, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைக் காட்டி, என் தலைவர் இவர்தான் எனச் சொன்னார். அப்போது நேரு அவர்கள் மௌனமாகத் தலை குனிந்தார். ஆனால், கிருஷ்ணமேனன் அவர்கள், பீடத்தை நெருங்கிச் சென்று, சிலுவையின் கீழே எழுதியிருந்த, “நான் தாகமாய் இருக்கிறேன்” என்ற வசனத்தை மறுபடியும் மறுபடியும் உரக்க வாசித்தார். அவர் கேலியாக அச்சொற்களை உச்சரித்தார். ஆலயத்தைவிட்டு வெளியே வந்ததும், அதன் அர்த்தம் என்னவென்று அன்னையிடம் கேட்டார். இயேசு சிலுவையில் தொங்கியபோது, நா வறண்டு, நான் தாகமாய் இருக்கிறேன் என்றார். அந்தத் தாகம், அன்புக்கும், ஆதரவுக்கும் எல்லாக் காலமும் ஏங்கும் ஆன்மாக்களின் தவிப்புக்கு உருவகமாகச் சொல்லப்பட்டது என்று விளக்கினார் அன்னை. இதைக் கேட்ட கிருஷ்ணமேனன் அவர்கள் பிரமித்துப் போனார்.

அன்பர்களே, உலகில், குறிப்பாக, மத்திய கிழக்கில் நடக்கும் ஆயுத மோதல்களால், அன்புக்கும், ஆதரவுக்கும் ஏங்கி எத்தனையோ மக்கள் நாடுகளின் எல்லைகளிலும், அகதிகள் முகாம்களிலும் காத்துக் கிடக்கின்றனர். அவர்களுக்கு நாமும் மற்றோர் அன்னை தெரேச்சாக்களாக இருக்க வேண்டாமா?  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.