2016-07-20 15:45:00

இனவெறி என்ற நஞ்சை அகற்ற, அனைவரும் இணையவேண்டும்


ஜூலை,20,2016. நீல நிறச் சீருடை அணிந்திருப்பதாலும், கருப்பு நிறத் தோலைப் பெற்றிப்பதாலும், நம் மக்கள் அதிகத் துன்பங்களை அடைந்துள்ளனர் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஜோசப் கர்ட்ஸ் (Joseph Kurtz) அவர்கள் கூறியுள்ளார்.

கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் காவல் துறையினரால் கொல்லப்படுதல், அதன் விளைவாக, காவல் துறையைச் சார்ந்த அதிகாரிகள் கொல்லப்படுதல் ஆகிய கொடுமைகள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சில நகரங்களில் கடந்த சில வாரங்களாக நடந்து வருவதைத் தொடர்ந்து, பேராயர் கர்ட்ஸ் அவர்கள் ஒரு விண்ணப்ப மடலை வெளியிட்டுள்ளார்.

"விடுங்கள், போதும்" (லூக்கா 22:51) என்ற தலைப்பில், பேராயர் கர்ட்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள மடலில், இயேசு, கெத்சமெனி தோட்டத்தில் கைது செய்யப்பட்ட வேளையில், புனித பேதுரு வன்முறையில் ஈடுபட்டதையும், அவ்வேளையில் இயேசு குறுக்கிட்டு வன்முறையை நிறுத்தச் சொன்னதையும் சுட்டிக்காட்டி, வன்முறைக்கு, வன்முறை ஒருபோதும் பதிலாக அமையாது என்று கூறியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் இனவெறி என்ற நஞ்சை முற்றிலும் அகற்ற, அனைவரும் இணைந்து வரவேண்டும் என்று பேராயர் கர்ட்ஸ் அவர்கள், தன் மடலில் விண்ணப்பித்துள்ளார்.

வெறியையும், வன்முறையையும் களைவதற்கு, ஒவ்வொரு நாள் வாழ்விலும் நாம் வெளிப்படுத்தும் சிறு, சிறு அன்புச் செயல்கள் உதவும் என்று பேராயர் கர்ட்ஸ் அவர்கள் தன் மடலின் இறுதியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : USCCB / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.