2016-07-19 15:46:00

சிறார் உரிமைகள் மதிக்கப்பட‌ திருப்பீடம் அழைப்பு


ஜூலை, 19,2016. மனிதர்களை வியாபாரப் பொருட்களாக கடத்துதல், கட்டாய வேலை போன்ற நவீன கால சமூகத் தீமைகளுக்கு எதிராக, தொடர்ந்து குரல் எழுப்பிவரும் திரு அவை, இத்தீமைகளை ஒழிக்க, தொடர்ந்து, உழைத்தும் வருகிறது என ஐ.நா. அவையில் உரையாற்றினார் திருப்பீட அதிகாரி, பேராயர் பெர்னர்தித்தோ அவுசா.

குழந்தைகளும் இளையோரும் வியாபாரப் பொருட்களாக கடத்திச் செல்லப்படுவதை ஒழிப்பது குறித்து, ஐ.நா.வில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் அவுசா அவர்கள், இத்தகைய தீமைகளுக்கான காரணங்களைக் கண்டறிவதிலும், அவற்றை ஒழிப்பதிலும், பாதிக்கப்பட்டோருடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதிலும், மக்களிடையே இத்தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், நல்மனம் கொண்ட அனைவருடனும் இணைந்து உழைக்க திருஅவை எப்போதும் தயாராக உள்ளது என கூறினார்.

மனித மாண்பையும், உரிமைகளையும் சுரண்டும் இத்தகையச் செயல்கள் குறித்து திருத்தந்தை, பலமுறை தன் உரைகளிலும் எழுத்துக்களிலும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் அவுசா.

மனித குலத்தின் புற்றுநோய் என வர்ணிக்கப்படும் இத்தகைய தீமைகள் குறித்து தன் கண்டனத்தை திருத்தந்தை வெளியிடுவதுடன், திருஅவையின் பல்வேறு அமைப்புகள் மூலம் இவற்றை அகற்றுவதற்கான செயல் திட்டங்களையும் ஊக்குவித்துவருகிறார் என எடுத்துரைத்த பேராயர் அவுசா அவர்கள், இன்றைய உலகில், வியாபாரப் பொருட்களாக கடத்தப்படும் ஏறத்தாழ 20 இலட்சம் சிறார்களூக்கு, ஐ.நா. கருத்தரங்கு நல்லதொரு தீர்ப்பை முன்வைக்கும் எனவும் கூறினார்.

சிறார்களின் உரிமைகள் மீறப்படல், சுரண்டப்படுதல், வியாபாரப் பொருட்களாக கடத்தப்படுதல், வன்முறைக்கு உள்ளாக்கப்படுதல் போன்றவற்றை அனைவரின் ஒத்துழைப்புடன் 2030ம் ஆண்டிற்குள் ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார், திருப்பீடப்பிரதிநிதி பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.