2016-07-19 14:30:00

இது இரக்கத்தின் காலம் : மணல்துளிகளால் மனம் தளராமல்...


“உனக்கு முன்னிருக்கும் மலை, உன்னை மனம் தளரச் செய்வதில்லை. நீ அணிந்திருக்கும் காலணிக்குள் புகுந்துவிடும் மணல்துளிகளே உன்னை அதிகம் மனம் தளர்ந்துபோகச் செய்கின்றன” (It isn't the mountain ahead that wears you out; it's the grain of sand in your shoe.) என்று சொன்னவர், கனடா நாட்டின் Robert Service என்ற கவிஞர். மணல் துளிகளாய் நம்மை உறுத்தும், பயமுறுத்தும் பிரச்சனைகளை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பொருத்து, அவற்றைத் தீர்க்கும் வழிகளும் அமையும்.

“எதிரிகள் நம்மைச் சுற்றிலும் வளைத்துக் கொண்டுள்ளனர்” என்று வீரன் தன் தளபதியிடம் பதட்டத்துடன் சொன்னபோது, “பிரமாதம்! நாம் எல்லாப் பக்கமும் தாக்குவதற்குத் தகுந்ததொரு வாய்ப்பு இதுவே!” என்று தளபதி சொன்னார்.

“சவால்களைக் கண்டு நான் பயந்து ஓடுவதில்லை. சவால்களை நோக்கி ஓடுகிறேன். பயத்தை மேற்கொள்ள சிறந்த வழி, அதை நம் காலடிக்குக் கீழ் மிதிப்பதே!” (I don't run away from a challenge because I am afraid. Instead, I run toward it because the only way to escape fear is to trample it beneath your feet.)

இதைச் சொன்னவர், Nadia Comăneci என்ற விளையாட்டு வீராங்கனை. இவர், 1976ம் ஆண்டு மோன்ட்ரியால் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். அதாவது, gymnastics பிரிவில் முதல் முறையாக பத்துக்குப் பத்து என்ற மதிப்பெண்ணை, அனைத்து நடுவர்களிடமிருந்தும் பெற்றார். அதுவரை, அந்தச் சாதனையை உலகில் யாரும் செய்ததில்லை. அச்சாதனையை படைத்தபோது அவருக்கு வயது 14. ஜூலை 18, இத்திங்களன்று, Nadia அவர்கள், அந்த உலகச் சாதனையைப் படைத்து 40 ஆண்டுகள் நிறைவுற்றன.

மணல் துளிகளால் மனம் தளர்ந்து போகாமல், மலையுச்சியை அடைய, இரக்கத்தின் காலம் நமக்கு உதவட்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.